தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டுத்தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 2024 ஆம் வருடத்திற்கான 20 புதிய பயிர் ரகங்களை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார்.
நடப்பாண்டு வேளாண் பயிர்கள் (10 எண்ணிக்கை) மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் (10 எண்ணிக்கை) என சுமார் 20 புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 20 புதிய ரகத்தில் நெல் மற்றும் சோள பயிர்களில் வெளியிடப்பட்ட புதிய ரகங்களின் விவரங்கள் பின்வருமாறு-
1.நெல் கோஆர்எச் 5:
- பெற்றோர்: டிஎன்யு 60 எஸ் x சிபிஎஸ்என் 405
- வயது: 120-125 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- இருவழி வீரிய ஒட்டு இரகம்
- நடுத்தர மெல்லிய சன்ன இரக அரிசி
- மகசூல்: 6467 கிலோ/எக்டர் (யுஎஸ் 312 மற்றும் ஏடிடீ 39 இரகங்களை விட 10 மற்றும் 18% அதிக மகசூல்)
- பருவம்: பின் சம்பா மற்றும் தாளடி
- வீரிய ஒட்டு விதை உற்பத்தி மிகவும் எளிது
- நடுத்தர அளவில் அமைலோஸ் மாவுப் பொருள் உடையதால் சமைப்பதற்கு ஏற்றது.
- புகையான், தண்டு துளைப்பான், குலை நோய் மற்றும் தானிய நிற மாற்றம் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது.
2.நெல் கோ 58 :
- பெற்றோர்: மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி X அபோ
- வயது: 120-125 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- பருவம்: பின் சம்பா / தாளடி
- பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன இரகம்
- மகசூல்: 5858 கிலோ/எக்டர் (பூசா பாஸ்மதியை விட 17% அதிக மகசூல்)
- மத்திய குட்டை, சாயாத தன்மை உடைய இரகம்
- துங்ரோ மற்றும் பச்சை தத்துப்பூச்சிக்கு எதிர்ப்பு தன்மையுடையது
- குலை மற்றும் பழுப்பு புள்ளி நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறனுடையது
- வறட்சியைத் தாங்கும் மூன்று மரபு குறியீடுகளை கொண்டது.
3. மக்காச்சோளம் விஜிஜ எச்(எம்)2
- பெற்றோர்: யுஎம்ஐ 1200 x யுஎம்ஐ விஐஎம் 419
- வயது: 95-100 நாட்கள்
Read more: கால்நடை தீவன உற்பத்தி- பிப்ரவரியில் TNAU மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
சிறப்பியல்புகள்:
- மகசூல்: மானாவாரியில் 6300 கிலோ/எக்டர் (கோஎச்எம் 8 மற்றும் என்கே 6240ஐ விட 6 மற்றும் 16.1% அதிகம்)
- பசுமை மாறா தன்மை; ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற தானியம் உடையது
- 81% முழு தானியம் காணும் திறன் உடையது
- படைப்புழு, தண்டு துளைப்பான், கரிக்கோல் அழுகல் போன்ற பூச்சி மற்றும் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு
4. இனிப்புச் சோளம் கோ (எஸ்எஸ்) 33
- பெற்றோர்: எஸ்எஸ் 179 x எஸ்எஸ் 172
- வயது: 110-115 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- தமிழகத்தின் முதல் இனிப்பு வகை சோள இரகம்
- மகசூல்: தானியம்: 2500 கிலோ/எக்டர், பசுந்தீவனம்: 42000 கிலோ/எக்டர், சாறு: 15,133 லி/எக்டர்
- சாறின் சர்க்கரை கட்டுமானம் (பிரிக்ஸ்) 18-19%
- எத்தனால் உற்பத்தி திறன்: 1127 லி/எக்டர்
- தண்டு துளைப்பான் மற்றும் ஆந்த்ராக்னோஸ் நோய்க்கு எதிர்ப்புத்தன்மை
5.சோளம் கோ 34:
- பெற்றோர்: டிஎன்எஸ் 603 x ஐஎஸ் 18551
- வயது: 100-105 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற இரகம்
- மகசூல் (மானாவாரி); தானியம்: 2765 கிலோ/எக்டர், உலர் தீவனம்: 9480 கிலோ/எக்டர்
- குறைந்த லிக்னின் மற்றும் எளிதாக செரிமானம் அடைய கூடியது
- குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்
- தேன் ஒழுகல், அடிச்சாம்பல் மற்றும் கதிர் பூஞ்சை நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதிகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் மூலம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புதிய ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
நெல்லில் விதை உறக்கம்- என்ன செய்து நீக்கலாம்? வல்லுநர்களின் விளக்கம்
Farmers tractor march: விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு- செவிசாய்க்குமா அரசு?
Share your comments