வெட்டி வேரின் வாசத்திற்கு நிகரே கிடையாது. பார்ப்பதற்கு பகட்டாகத் தெரியாத இந்த வேர் அதீத மணம் கொண்டது. அதுமட்டுமல்ல உடலுக்கும் பல்வேறு பலன்களைக் கொடுக்கிறது. அதனால்தான், வெக்கையை விரட்ட வெட்டிவேர் என்றார்கள் நம் முன்னோர்கள். மேலும் வெட்டிவேர் ஊறிய மண்பானைத் தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்கிறார்கள்.
இத்தனை மகத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர் செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
பெயர்க் காரணம்
புல் இனத்தைச் சேர்ந்த்து வெட்டி வேர். இதன் வேரை வெட்டி எடுத்த பின்பு புல்லையும், வேரையும் வெட்டி, நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால், வெட்டி வேர் என்று அழைக்கப்படுகிறது.
நிலம்
வெட்டிவேரைப் பயிரிடுவதற்கு செம்மண், களிமண், கரிசல் மண் என எத்தகைய மண்ணாக இருந்தாலும் சரி. அதில் வெட்டிவேர் நன்கு வளரும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வரை வேர் நிச்சயம் கிடைக்கும். மணல் பாங்கான நிலமாக இருந்தால், வேர் நன்கு இறங்கி வளரும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். அத்தகைய நிலமாக இருந்தால், இரண்டு டன்னுக்கு மேலும் வெட்டிவேர் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
நாற்று
ஒரு ஏக்கருக்கு பன்னிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று குறைந்தபட்சம் 60 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்த முறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம். இதன் மூலம் வருமானமும் பார்க்கலாம்.
நடவுப் பணிகள்
கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் தெரிந்தாலும் நாற்று நட்ட 15-வது நாள் முதல் 25 நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். ஆறு மாதங்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
உரம் தேவையில்லை
வெட்டிவேர் சாகுபடிக்கு ரசாயன உரமும் தேவையில்லை. பூச்சி மருந்தும் அடிக்கத் வேண்டியதில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது. பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சி விரட்டியாகவும் செயல்படும்.
கெட்டித்தன்மை போக்கும்
நிலத்தில் அதிகக் காரத்தன்மை கொண்ட களிமண்ணாக இருந்தால், களிமண்ணின் கெட்டித்தன்மையைப் போக்க வெட்டிவேரைப் பயிரிடுவது நல்லது. ஏனெனில் மண்புழு செய்யும் வேலையை ஒவ்வொரு வெட்டிவேர் செடியும் செய்துவிடும். இதன் வளர்ச்சிக்கு அதிக தண்ணீரும் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது.
அறுவடைப் பணிகள்
12 மாதங்களில் இருந்து 14 மாதங் களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம். செடியின் வேர் அறுபடாமல் அப்படியே பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரைமட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். மேலே உள்ள பச்சை இலைகளை மாட்டுத்தீவனமாகப் பயன்படுத்தலாம்.
வெளிநாட்டினரைக் கவர்ந்தது
இந்த வேரின் உன்னதத்தை உணர்ந்த வெளிநாட்டினர் பலரும், இந்தியா வரும்போது, வெட்டிவேர் பாய், தொப்பி, காலணி உள்ளிட்டவற்றைத் தவறாமல் வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
நன்மைகள்
-
வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது.
-
உடலுக்கு குளிர்ச்சியையும், நறுமணத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லது.
-
இதனை மணமூட்டியாக தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
-
கை, கால் தசைப்பிடிப்பு உள்ளவர்கள், அந்த இடத்தில் வெட்டிவேர் எண்ணெய் தடவி வர விரைவில் குணமாகும்.
-
காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும்.
-
வெட்டிவேர் ஊறிய நீரைக் குடித்தால் காய்ச்சல், நீர், எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் குறையும்.
மேலும் படிக்க...
கொரோனா காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை விடுகளில் சுத்தம் செய்வது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்
குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!
Share your comments