![hydroponic farming](https://kjtamil.b-cdn.net/media/3993/1.jpg?format=webp)
பண்டைய காலங்களில் ஒவ்வொரு வகை மண்ணிலும் ஒவ்வொரு வகை பயிர்களை விதைத்து அறுவடை செய்தனர். மண் வளம் என்பது பயிர்களுக்கு ஆதாரமாகும். இன்றைய நவீன உலகில் மண் இல்லாமலேயே விவசாயம் செய்யவதற்கான புதிய யுக்திகள் கையாள படுகின்றன. மண் இல்லாமல் இயற்கையான முறையில் செடிகளை வளர்க்கும் தொழில்நுட்பம் தான் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம்.
பசுமை குடிலில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்வதன் மூலம் காய்கறிகள், பழங்கள் விளைவிக்க முடியும் என்கிறார்கள். இரசாயன உரம் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் சுவை மிகுந்ததாகவும், சத்து மிக்கதாகவும் உள்ளது.
மண்ணில்லா விவசாயம்
மண்ணில்லா விவசாயத்தை 'ஹைட்ரோபோனிக்ஸ்’ விவசாயம் என்று கூறுவது உண்டு. அதாவது மண்ணில்லாமல் நேரடியாக நீர் மூலம் செடிகளை வளர்க்கும் முறை. பி.வி.சி பைப்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வட்ட வடிவ துளைகள் இட்டு அதில் சல்லடை போன்ற பிளாஸ்டிக் கப்களை வைத்து செடி நிற்க ஒரு விதமான களிமண் உருண்டைகளை போட வேண்டும். இந்த களிமண் உருண்டைகள் நீரில் கரையாது, ஆனால் நீரை உறிஞ்சு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். இந்த விவசாயத்தில் வேர் பகுதிக்கு நேரிடையாக காற்று, நீர் வழங்கப்படுகிறது. ஏரோபோநிக்ஸ் முறையில் காற்று நிறைந்த பி.வி.சி. பைப்புகளுக்குள் மிதந்தபடி இருக்கும்.
![Hydroponic Technology](https://kjtamil.b-cdn.net/media/3994/hydroponic-1.jpg?format=webp)
நன்மைகள்
- தண்ணீர் பயன்பாடு பெருமளவு குறைகிறது. இதிலிருந்து வெளியேறும் நீர் மறு சுழற்சி செய்வதன் மூலம் மீண்டும் செடிகளுக்கு பயன்படுத்தப் படுகிறது.
- செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீருடன் கலந்து செலுத்தும் போது செடிகள் நன்கு செழித்து வளர்கிறது.
- பசுமை குடில்களில் வளர்க்கும் போது பறக்கும் பூச்சிகளினால் ஏற்படும் நோய்கள் எதுவும் வருவதில்லை. பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயம் செய்யலாம்.
- இதற்கு தனியா தண்ணீர் விட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பராமரிப்பது எளிது. பெரிய இட வசதி தேவை இல்லை. குறைவான இடவசதியில் ரசாயன இல்லாத காய்கறிகளை பலமடங்கு உற்பத்தி செய்யமுடியும்.
- வேலை ஆட்கள் யாரும் தேவை இல்லை.
- மற்ற விவசாய முறைகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி செலவு மிகக் குறைவு
- இந்த முறை விவசாயத்தில் களைகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை.
- குறைந்த நாட்களில் மிக விரைவாக அறுவடைக்கு வந்து விடும்.
- ஆண்டு முழுவதும் எல்லா வகை காய்கறிகளும், பழங்களும் சாகுபடி செய்யலாம்.
நாம் நமது குடியிருப்பிற்காக பல விளை நிலங்களை அழித்து அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து சுகமாக வாழ்கிறோம். விளைநிலங்கள் எல்லாம் அதிகபடியான ரசாயனத்தால் உயிர் தன்மை இழந்து மலடாகி வருகின்றன. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலை. இவை அனைத்திற்கும் மண்ணில்லா விவசாயம் மட்டுமே மாற்றாகவும் சரியான தீர்வாகவும் இருக்கும் என்பதே பலரின் கருத்து. நிலங்களை சிதைக்காமல், இயற்கையை சேதப்படுத்தாமல் 'ஹைட்ரோபோனிக்ஸ்’ விவசாயத்தை ஊக்குவிப்போம்.
Anitha Jegadeesan
Krishi Jagarn
Share your comments