தாவர வளர்ச்சிக்கு நுண்ணூட்டச் சத்து என்பது அடிப்படையான ஒன்று. நெல் உட்பட அனைத்து பயிர்களுக்கும் 16 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள் என்றே கூறலாம். கால்சியம், மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள் இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண்ணூட்ட சத்துப் பொருட்கள்.
பயிர்களுக்கு தேவையான இதர சத்துக்களான ஆஸ்சிஜன், கார்பன், ஹைட்ரஜன் போன்றவற்றை பாசனம் செய்யும் நீரிலிருந்து பெற்று கொள்கின்றன. பெரும்பாலான சத்துக்களை நெற்பயிர்கள் நீரிலிருந்தும், மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. நெற்பயிறுக்கு மிக தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் அடிப்படை என்பதால் இவற்றை நாம் உரங்களுடன் கலந்து பயிர்களுக்கு செலுத்துகிறோம்.
தமிழகம் முழுவதும் பலவகையான மண் வகைகள் காணப்படுகின்றன. மண் பரிசோதனை மையங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நுண்ணூட்ட சத்துக்கள் குறைபாடு இருப்பது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது. இதனால் நெற்பயிரின் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
நுண்ணூட்ட சத்து குறைபாட்டிற்கான காரணங்கள்
- அதிக மகசூல் வேண்டி உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்களை பயன்படுத்துவதால் மண்ணின் ஊட்டச்சத்து குறையும்.
- நுண்ணூட்ட சத்து பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம், இயற்கை உரங்களை கைவிட்டது ஆகும். பசுந்தாள் உரம், கம்போஸிட் உரம், தொழுவுரம் போன்றவற்றை பயன்படுத்தாத நிலை, முறையாக பயிர் சுழற்சி செய்யாமல் இருப்பது ஆகியனவாகும்.
- பருவநிலை மாற்றத்தினாலும், மழை வெள்ளம் ஏற்படும் போதும் அதிக அளவிலான மண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு மண்ணின் ஊட்டச்சத்தை குறைத்து விடுகிறது.
- தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் மண்ணின் தழைச் சத்து, மணிச் சத்து குறைந்து விடுகிறது.
- களி மண், மணல் போன்ற மண்வகைகள், உப்புச் சத்துக்கள் நிறைந்த நிலத்தடி நீர்ப்பாசனம் போன்ற காரணங்களால் நுண்ணூட்ட சத்து குறைபாடு ஏற்படும்.
நுண்ணூட்ட சத்து மேலாண்மை
- இயற்கை உரங்களான தொழு உரம், கம்போஸ்ட் உரம், பதப்படுத்தப்பட்ட கரும்பு தோகை உரம் என ஏதேனும் ஒன்றை ஆண்டுக்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும்.
- நடவு வயலில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாகம், 20 கிலோ மண் விதத்தில் கலந்து, தொழு உரத்துடன் கலந்து மண்பரப்பின் மீது தூவி பின்பு நடவு செய்ய வேண்டும்.
- களிமண் நிலமாக இருக்குமானால் 5 கிலோ துத்தநாகத்தை அடிஉரமாக இட்டு, மீதி உரத்தை மூரியேட் பொட்டாஷ் உரத்துடன் கலந்து பயன்படுத்தலாம்.
- ஒரு வேளை மண்ணில் மணி சத்துக்கள் அதிகம் காணப்பட்டால் துத்தநாகத்தை கரைசலாக பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
- வேளாண் துறையினரால் நெற்பயிருக்கு தேவையான நுண்ணூட்ட சத்துகள் சரிவிகிதத்தில் கலந்து விற்பனை செய்வதால் நேரடியாக இதனை பயன்படுத்தலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நெற்பயிரில் ஏற்படும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டை தவிர்க்கலாம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments