பயிர்சாகுபடியின் போது, நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில யுக்திகள், கையாள வேண்டிய வழிவகைகள் என பல விஷயங்கள் உண்டு. இவற்றைத் தெரிந்துகொண்டு, குறித்த நேரத்தில் தகுந்தபடி செய்தால், பலனைக் கட்டாயம் பெற முடியும். அப்படி விவசாயிகள் பக்குவமாகக் கையாளவேண்டிய யுக்திகளில் ஒன்று ஊடுபயிர்.
பாதுகாப்பு அரண் (Protection Wall)
ஊடுபயிர் என்பது பயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்களைத் தடுக்க, ஈரப்பதத்தைக் காக்க, மண் வளத்தை பெருக்க என பலவகைகளில் பயன்படுகிறது.
ஊடுபயிர் சாகுபடி
ஒருவிதை தாவரப் பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றுடன், இருவிதை தாவர பயிர்களான பயிறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம். ஊடுபயிர், முக்கிய பயிர்களுக்கு பக்கத்துணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கிறது.
மானாவாரி, இறவை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள், இலைகள் மூலம் 80 சதவீதம் தங்களுக்கு தேவையான உணவை சூரிய ஒளி மூலம் உற்பத்திசெய்து கொள்கின்றன.
சூரிய ஒளி, இலைகளில் அதிகம் பட்டால் ஸ்டார்ச் (Starch) உற்பத்தி குறைவாகிறது. சூரிய ஒளி ஒரு இலையில் படும் அளவை பொறுத்து உணவு உற்பத்தி அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்புள்ளது.
ஆக இங்கு ஒருவித்து தாவரத்திற்கு அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது.ஒரு பயிரை மட்டும் உற்பத்தி செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியாது.
எனவே, ஒரு மடங்கு நிலம், இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற விகிதாச்சாரத்தில் (1:2:3) ஒரு நிலத்தில் முக்கிய பயிர், ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் என்று சாகுபடி செய்தால் அதிகளவில் லாபம் பெறலாம்.
பாதிப்பு இல்லை (No Defect)
ஊடு பயிர்களால் முக்கிய பயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முக்கிய பயிருக்கு வரும் நோய்கள், பூச்சிகள் தாக்கம் போன்ற இடையூறுகளைத் தடுக்கப் பயன்படுகிறது இந்த ஊடுபயிர்.
கூடுதல் வருமானம் (Extra Income)
ஊடுபயிர் சுமார் 40 சதவீதம் வரை வருமானம் கிடைக்க வழிவகை செய்கிறது. அதாவது குறைந்த இடத்தில் அதிக வருமானம் தருகிறது. அதன் இலை, தழைகள், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகின்றன. மேலும் நிலத்தின் மண் வளத்தை பேணி தழைச்சத்தை, தன் வேர் முடிச்சுகளின் மூலம் கிரகித்து மண்ணையும் வளப்படுத்துகிறது.
எதை ஊடுபயிராகக்கலாம்?
ஒவ்வொரு முக்கிய பயிருக்கும், ஒவ்வொரு விதமான ஊடுபயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
பருத்தி ( Cotton)
பருத்திக்கு ஊடுபயிராக உளுந்து, பாசி, தட்டை, வெண்டை, கொத்தவரை, மக்காச்சோளம் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராக சூரியகாந்தி, செண்டு மல்லி ஆகியவற்றைச் சாகுபடி செய்யலாம். பருத்திக்கு முழுப்பயிர் பாதுகாப்பு அரணாக இது இருக்கிறது.
நிலக்கடலை (Peanut)
நிலக்கடலையில், துவரை, உளுந்து போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
சூரியகாந்தி (Sunflower)
சூரியகாந்தி வயலை சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடலாம்.
தென்னை (Coconut Tree)
தென்னையில் ஊடுபயிராக சணப்பு, கொழுஞ்சி, ஜாதிக்காய், எலுமிச்சை, மரவள்ளி மற்றும் தீவனப் பயிர்கள் போன்றவற்றை சாகுபடி செய்தால், அவை நிலத்திற்கு உரமாவதுடன் அதன் விதைகளை சேகரித்து அதிக விலைக்கும் விற்பனை செய்யலாம். அதேபோன்று, தென்னை தோப்பு மண் வளம் பெருக மல்பெரியும் ஒரு நல்ல ஊடு பயிர்.
மேலும் படிக்க...
தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை - இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
பருத்தி மகசூலை பக்குவமாக அதிகரிக்க வேண்டுமா? நிபுணர்கள் தரும் யோசனைகள்!
Share your comments