தேனி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மரம் மல்பெரி திட்டத்தில் பயனடைய முன்வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பட்டு உற்பத்தி (Silk production)
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் பட்டுகூடு வளர்ப்புக்கு ஏற்ற காலநிலை நிலவுகிறது. இதனால் ஆண்டுதோறும் பட்டு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பட்டு உற்பத்தியில் தேனி மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது.
பட்டு வளர்ப்புத் திட்டங்கள் குறித்து இத்துறையின் உதவி இயக்குனர் கணபதி தெரிவித்திருப்பதாவது:
தேனி மாவட்டத்தில் 1850 ஏக்கரில் மல்பெரி செடி வளர்க்கப்படுகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுக்கு 10 முறை வருமானம் கிடைப்பதோடு, 2 ஏக்கருக்கு 2 ஆயிரம் மூட்டைகள் மூலம் 1600 முதல் 1800 கிலோ பட்டுக்கூடு எடுக்கலாம்.
இதில் ரூ.5 லட்சம் வரை நிகர லாபம் கிடைக்கும்.
தேனி பட்டுக்கூடு அங்காடிக்கு விற்பனைக்காக மாதந்தோறும் 10 டன் பட்டுக்கூடு வருகிறது. இதுத்தவிர பிற மாவட்டங்களுக்கும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதையடுத்து பட்டு உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மானியம் (Subsidy)
குறிப்பாக மத்திய அரசின் சிறப்பு திட்டம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு பட்டுக்கூடு மனைக்கூடம் அமைக்க ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது.மாநில அரசு திட்டம் என்றால், ரூ.1.20 லட்சம் வழங்கப்படும். மல்பெரி நடவுக்கு ரூ.10,500 மானியம் கிடைக்கும். சொட்டுநீர் மானியமாக ரூ.33,600மும், புழுவளர்ப்பிற்கு மானியமாக ரூ.52,000மும் கிடைக்கும்.
விதிகள் (Rules)
-
இளம் பட்டுபுழு வளர்ப்புக்கு 85 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் அவசியம். சிலர் இதை பின்பற்றுவதில் சிரமமாக இருக்கலாம்.
-
இதனால் டி.மீனாட்சிபுரம், லட்சுமிபுரத்தில் பட்டுப்புழு அபிவிருத்தி கூடம் உள்ளது. இங்கிருந்து இளம் புழுக்களை வாங்கலாம்.
-
ஒரு உற்பத்தி ஒரு மாவட்டம் என்றத் திட்டத்தில் தேனி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதல் மானியம் கிடைக்கும்.
-
இயற்கை சீற்றத்தால் புழுவளர்ப்பு பாதிக்கப்படும் வேளையில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க ஏதுவாக, பட்டுக்கூடு மனை காப்பீடுகள் உள்ளன.
விவசாயிகளுக்குப் பயிற்சி
-
மயிலாடும்பாறையில் 10.5 ஏக்கரில் பயிற்சி மையம் உள்ளது. இங்கு தொழில்நுட்ப பயிற்சி, தரமான நாற்று, விதை கூடு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
-
விவசாயிகள் விரும்பும் பட்சத்தில் ஓசூரில் உள்ள அரசு பட்டு வளர்ப்பு பயிற்சி பள்ளியில் 5 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
-
இதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு செலவுகளுக்கு ரூ.7 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
-
விற்பனைக்கு உதவி செய்ய ஏதுவாக பட்டுக்கூடு தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும்.
-
அரசுப் பட்டுக்கூடு அங்காடியில் விவசாயிகள் விற்பனை செய்யலாம். 2 நாட்களில் அவர்களின் வங்கி கணக்கில் அதற்கான பணம் செலுத்தப்படும்.
தகுதி (Qualification)
சொந்தமாகக் குறைந்தது ஒரு ஏக்கர் தண்ணீர் வசதியுடன் இருக்க வேண்டும். பட்டு விவசாயம் செய்ய விரும்புவோர் ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையத்தில் உள்ள தொழில் நுட்ப சேவை மையங்கள் மூலம் ஆலோசனை பெறலாம்.
மானியம் (Subsidy)
புதியத் திட்டங்கள் மூலம் மரம் மல்பெரி வளர்ப்பிற்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரமும், மண்புழு உரக்குழி அமைக்க ரூ.12,500 மானியம் வழங்கப்படும்.
மரம் மல்பெரியில் இலைஉதிர்வு அதிகம் இருக்காது. முதல் ஒன்றரை ஆண்டு பாதுகாப்பாக வளர்த்தால் போதும் கூடுதல் பலன் தரும்.
பட்டுநுாற்பாலை பற்றிகோட்டூரில் ரூ.2.60 கோடியில் தானியங்கி பட்டுநுாற்பாலை பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மாதம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு தேவை இருக்கும். இதன்மூலம் 1500 முதல் 1600 கிலோ பட்டுநுால் கிடைக்கும். எனவே வியாபாரிகளை தேடி விவசாயிகள் செல்ல வேண்டியது இருக்காது.
முன்னோடித் திட்டம் (Pioneer project)
மத்திய அரசின் முன்னோடி திட்டத்தில் பள்ளபட்டி, அம்மச்சியாபுரத்தை சேர்ந்த 9 விவசாயிகளைக் கொண்டக்கு குழு பட்டு வளர்ப்பில் ஈடுபடுகிறது. இக்குழுவிற்கு, மனைக்கூடத்துக்கு ரூ.2.60 லட்சம், நடவுக்கு ரூ.32,500, புழுவளர்ப்பு தளவாடங்களுக்கு ரூ.48,750 வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு (Contact)
இந்த முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்தப் புதியத் திட்டத்தின மூலம் பயன்பெற விரும்புவோர், 96886 28855 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!
Share your comments