பொதுவாகவே நம் வீடுகளில், சாலையோரங்களிலுள்ள மரங்களின் இலைகள் கோடைக்காலங்களில் முற்றிலும் காய்ந்து சருகாக மாறிவிடும். ஒரு காற்று அடித்தாலே மரங்களிலிருந்து இலைகள் விழத்தான் செய்யும். இந்த காலங்களில் அவற்றை சுத்தப்படுத்துவது ஒரு கடினமான வேலையாக இருக்கும் பலருக்கு. அவ்வாறாக கூட்டி அள்ளிய மொத்த சருகுகளையும் உடனடியாக தீயிட்டு கொளுத்தி விடுவது வாடிக்கையாக உள்ளது.
இது தவறான அணுகுமுறை. அவற்றை கொளுத்துவதற்கு பதிலாக, ஆக்கப்பூர்வமான முறையில் நாம் பயன்படுத்தலாம். எந்த வகையில் எல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து, வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன் பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
1) உரமாக்குதல்:
வீட்டு தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்துவதற்கு உதிர்ந்த இலைகளை பயன்படுத்தலாம். இவற்றை ஓரு குழியில் போட்டு நீர்பாய்ச்சி மக்க வைத்தால் அவை உரமாகும். ஒன்றின் கழிவு மற்றொன்றின் உரமாக மாறுகிறது. இதனை வீட்டுத் தோட்ட செடிகளுக்கு , ஊட்டச்சத்துள்ள உரமாக பயன்படுத்தலாம்.
2) மண்ணை மேம்படுத்த:
பண்ணை தோட்டங்களில் உள்ள மரங்களின் இலைகளை அப்படியே சேகரித்து நிலத்தில் உழும்போது இட்டு மண்ணோடு மண்ணாக கலந்து வைத்தால் மண்ணில் அங்கக சத்துகள் உருவாகி மண்வளம் மேம்படுவதுடன், நுண்ணுயிர் பெருக்கம் அதிகமாகி பயிர்களின் வளர்ச்சியை தூண்டி அதிக விளைச்சல் கிடைக்க வழிவகுக்கும்.
3) நிலப்போர்வை:
வறட்சியான காலங்களில் தென்னை, மாந்தோப்புகளில் மரங்களின் அடிப்பாகத்தில் உதிர்ந்த இலைகளை போட்டு (MULCHING) மேற்கொள்வதன் மூலம் நிலத்தடி நீர் ஆவியாவது தடுக்கப்படுவதுடன், களைச்செடிகள் வளர விடாமலும் செய்யலாம். இந்த கொடுமையான வெப்பத்தையும் இந்த இலை தழைகளை கொண்டு எவ்விதமான செலவில்லாத வகையில் நிலப்போர்வை அமைக்கலாம்.
4) இலை-தேநீர் கசாயம்:
உதிர்ந்த இலை தழைகள், பூக்களை குறிப்பிட்ட அளவு தண்ணீர் உள்ள தொட்டியில் ஓரிரு நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
அவற்றுடன் நாட்டு மாடு கோமியம் கலந்து வைத்து, பின் தண்ணீர் கலந்து பயிர்கள் (இளம் பயிர்கள்) மீது தெளித்தால் பயிரின் இலைகள் பச்சையாக பளிச்சென இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5) பயோ கேஸ் (BIO GAS) உற்பத்தி: ஜெர்மனி போன்ற மேலை நாடுகளில், இலையுதிர் காலங்களில் உதிர்ந்த இலைகளை சேகரித்து பயோ கேஸ் உற்பத்தி செய்துவருகின்றனர். இதனால் மின்சார செலவு மிச்சமாகிறது.
6) இயற்கை நிறமிகள் (PIGMENT):
இலையுதிர் காலங்களில் உதிர்ந்த இலைகளை சேகரித்து அவற்றில் இருக்கும் இயற்கை நிறமிகளை தனியாக பிரித்தெடுத்து அவற்றை NATURAL DYE-யாக பயன்படுத்தும் முறையினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
7) கைவினைப் பொருட்கள் தயாரிப்பு: காய்ந்துபோன இலைகளை பக்குவப்படுத்தி, பதப்படுத்தி இயற்கை இலை கைவினை பொருட்களை (HANDY GRAFTS) தயாரிக்கவும் செய்யலாம். இனி மேலாவது நாம் உதிர்ந்த, முதிர்ந்த இலைகளின் சருகுகளை தீயிட்டு கொளுத்தி எரிப்பதை தவிர்த்து பயனுள்ள முறைகளில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டுமென அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் (94435 70289) தெரிவித்துள்ளார்.
Read more:
சித்திரை பட்டத்திற்கேற்ற எள் இரகங்கள் என்ன? எது கைக்கொடுக்கும்?
Share your comments