கால மாற்றத்திற்கு ஏற்ப, நம்முடையப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் சிலவற்றை நாமே தயாரித்துக் கொள்வது, சிக்கனமாக வாழக் கைகொடுக்கும். அந்தவகையில், குப்பை எனத் தூக்கிப்போடும் கழிவுகளைச் சேர்த்தால் அருமையான இயற்கை உயரங்களைத் தயாரிக்க முடியும்.
இயற்கை உரங்கள் (Natural fertilizers)
இவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள், இயற்கைக்கு மட்டுமல்ல, மனிதக் குலத்திற்கும் நன்மை பயக்கும் என்பதை நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். ரசாயனக் கழிவுகள் மண்ணை மட்டும் காவு வாங்கவில்லை. அதிலும் யூரியா போன்றவையே, இன்று மனிதக் குலத்திற்குத் தீராத நேயாக மலட்டுத்தன்மை விதைத்திருக்கிறது.
அப்படியானால் இதற்கு தீர்வு எதுவென்றால், அதுதான் இயற்கை விவசாயம். இதற்கு இயற்கை உரங்களே அடித்தளம். அத்தகைய இயற்கை உரங்களை நாமே தயாரித்துக்கொள்ள முடியும்.
அதுவும் நயா பைசா செலவில்லாமல். குறிப்பாக சமையலறைக் கழிவுகளில் என்னென்ன உரங்களை தயாரிக்க முடியும் என்பதை இப்போது பார்ப்போம்.
அரிசி கழுவியத் தண்ணீர் (Rice wash water)
சாதம் வடிக்கப்பயன்படுத்தும் அரிசியைக் கழுவி ஊற்றும் தண்ணீரைச் சேகரித்து, வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டுள்ள பூச்செடிக்கு ஊற்றிப்பாருங்கள். ஒரு வாரத்தில், ஊட்டச்சத்துடன் வளர்வதை நம்மால் கண்கூடாகக் காணமுடியும்.
கஞ்சித் தண்ணீர்
அரிசியை வேகவைத்து வடிக்கும் தண்ணீரை கஞ்சி என்பார்கள். அதனுடன் பால்காய்ச்சிய பாத்திரத்தை 50 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கழிவி சேர்க்கவும். மறுநாள் இந்தக்கலவையை, செடிகளுக்கு ஊற்றினால், ஒரு வாரத்தில் அபரிதமாக வளர்வதைப் பார்க்க முடியும்.
ஏனெனில் இந்த கஞ்சித்தண்ணீர், தாவரங்கள் மண்ணுக்கு அடியில் சேமித்து வைத்திருக்கக்கூடிய நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கின்றன. இதனால் அவை மண்ணின் மேலே வந்து, தங்கள் சுவாசத்தையும் ஆற்றலையும் பெருக்கிக்கொண்டு மீண்டும் மண்ணுக்கு அடியில் சென்று என்ஸைம்களை உருவாக்குகின்றன. அவை அபரிதமான வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.
தோல் கழிவுகள் (Skin waste)
வெங்காயம், பூண்டுத்தோல் ஆகியவற்றுடன், காய்கறிகளில் இருந்து நீக்கப்படும் தோல் கழிவுகளைத் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு தக்காளி அல்லது வீணான வாழைப்பழம் சேர்த்து சேமிக்க வேண்டும். இந்த கலவையில் 3 நாள் கழித்து, ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு கைப்பிடி கல் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துவிட்டுவிடவும். இத்துடன் ஒரு லிட்டர் குடிநீரைச் சேர்த்து ஊற வைத்து, ஒரு நாள் கழித்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதில் இரண்டு ஸ்பூனை செடிகளுக்கு ஊற்றிவர யூரியா உரத்திற்கு நிகரான வளர்ச்சி கிடைப்பது உறுதி.
மீன் அமிலம் (Fish acid)
மீன் சாப்பிடுபவராக இருந்தால், அதனை சுத்தம்செய்யும்போது கிடைக்கும் கழிவுகளை பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு, இரண்டு ஸ்பூன் வெல்லம் சேர்த்து 7 நாட்கள் மூடி வைக்கவும். இத்துடனும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக்கொண்டால், லட்சக்கணக்கான நுண்ணியிரிகள் வளர்ந்துவிடும். இந்த உரம் வளராத தாவரங்களைக்கூட வளரச் செய்யும். மேலும், செடி, கொடிகள் வலுவாக நிற்பதற்கும், பருவத்திற்கான செயல்களை தவறாமல் செய்வதையும் ஊக்குவிக்கும்.
தொழு உரம்
-
வீணான மாமிசக் கழிவுகளுடன் கல்உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து 2 நாட்கள் விட்டுவிடவும். அத்துடன் ஒரு ஸ்பூன் மீன் அமிலத்தை சேர்த்துக்கொள்ளவும்.
-
இதனை செடிகளுக்கு பயன்படுத்தினால், யூரியாவைவிட 10 சதவீதம் அதிகப்படியான வளர்ச்சியைப் பெற முடியும்.
-
இந்தக் கலவையை 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு, அதனுடன் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து மரங்களுக்குப் பயன்படுத்தலாம்.
-
செடிகளாக இருந்தால், அரை லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் கலந்து உரமாகப் பயன்படுத்தலாம்.
இந்த உரங்கள் அனைத்துமே ஒரு பைசா செலவில்லாமல் வீட்டிலேயே தயாரித்து தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!
Share your comments