நிலத்தேர்வு
விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும், அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 200 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
பருவம்
ஜீன்-செப்டம்பர் மற்றும் நவம்பர்-பிப்ரவரி
பயிர் இடைவெளி
45×10 செ.மீ.
உரமிடுதல்
தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை ஒரு ஹெக்டேருக்கு 40:75:40 கிலோ என்ற அளவில் அடியுரமாக இடவேண்டும். விதைத்த 20 நாட்களுக்குப் பின் 50 கிலோ தழைசத்தினை முதல் மேலுரமாக இடவேண்டும். விதைத்த 40 நாட்களுக்குப் பின் 60 கிலோ தழைச்சத்தினையும் 35 கிலோ சாம்பல் சத்தினையும் இரண்டாவது மேலுரமாக இட வேண்டும்.
விதைப்பிற்கு முன் விதை நேர்த்தி
விதைகளை இயற்கை முறையில் 80 சத சூடோமோனஸ் ப்ளுரசன்ஸ் கரைசலில் 12 மணி நேரம் ஊற வைத்து விதைத்தல் வேண்டும் (80 கிராம் சூடோமோனஸ் பொடியினை 100 மி.லி. நீரில் கலந்த கரைசல்) (அல்லது)
விதைகளை ஒரு 1-2 சதவிகிதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலை ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் (1:1) கரைசல் என்ற அளவில் 6-8 மணி நேரம் ஊற வைத்து விதைத்தல் வேண்டும்.
நிலக்கரி சுரங்க மண்ணில் நல்ல முளைப்புத் திறனை அடைய விதைகளை 1-2 சதவிகிதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலை ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் (1:1) கரைசல் என்ற அளவில் 6-8 மணி நேரம் ஊற வைத்தல் பின்பு ஊதா நிற பாலிமர் (ஒரு கிலோவிற்கு 3 கிராம்) + கார்பென்டசிம்(ஒரு கிலோவிற்கு 2 கிராம்)+ இமிடாகுளோபிரிட் ( ஒரு கிலோவிற்கு 1 மில்லி) +டை அம்மோனியம் பாஸ்பேட் (ஒரு கிலோவிற்கு 30 கிராம்) +நுண்ணூட்ட கலவை (ஒரு கிலோவிற்கு 20 கிராம்)+அசோஸ்பைரில்லம் ( ஒரு கிலோவிற்கு 60 கிராம்) என்ற அளவில் கலந்து விதைகளை நேர்த்தி செய்தல் வேண்டும்.
இலைவழி உரம்
பெண் பூ பூக்கும் பருவம் மற்றும் விதைகள் முதிரத் தொடங்கும் பருவம் ஆகிய இருதருணங்களில் 0.5 சதம் நியூட்ரி கோல்டு தெளித்தல் (அல்லது)
பெண் பூ பூக்கும் பருவம் மற்றும் விதைகள் முதிரத் தொடங்கும் பருவம் ஆகிய இருதருணங்களில் 3 சதவிகிதம் முளைவிட்ட தட்டைப்பயிறு பால் தெளித்தல்
அறுவடை
பயிரின் எல்லா கதிர்களையும் ஒரே முறையாக அறுவடை செய்யலாம், அறுவடை செய்த கதிர்களிலிருந்து நிறம் மாறிய மணிகளை கொண்ட கதிர்கள் மற்றும் நோய் தாக்கிய கதிர்களைப் பிரித்து எடுத்தல் வேண்டும். மீதமுள்ள ஒரே நிறமுடைய சீரான வளர்ச்சி சொண்ட கதிர்களை மட்டும் விதைக்காகப் பயன்படுத்த வேண்டும்.
விதைகளைப் பிரித்தெடுத்தல்
கதிர்களின் ஈரத்தன்மை 15 முதல் 18 சதமாக இருக்கும் போது கதிர்களை வளையும் மூங்கில் குச்சியால் அடித்தோ அல்லது மக்காச் சோள விதைப்பிரிப்பான் கொண்டோ விதைகளைப் பிரித்தல் வேண்டும்
சரியான முறையில் விகைள் பிரிக்கப்படவில்லையெனில் விதைகளில் விதைக்காயங்கள் ஏற்பட்டு விதைகள் பூஞ்சாணத் தாக்குதலுக்கு உள்ளாகும்.
விதைகளை 20 சத இரும்பு குளோரைடு அல்லது 0.5 சத 2,3,5 டெ்டராசோலியம் குளோரைடு கரைசலில் அரை மணி நேரம் ஊற வைப்பதால் விதைகளில் ஏற்பட்ட விதைக் காயத்தின் தன்மையையும் அளவையும் அறியலாம்.
கதிர்களிலிருந்து பிரிக்கப்பட்ட விதைகளை 18/64” கண் அளவு (7.2 மி.மீ.) கொண்ட வட்ட சல்லடைகளைக் கொண்டு சலிப்பதால் விதையின் தரத்தை மேம்படுத்தலாம்.
விதை நேர்த்தி
விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்து நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும் (அல்லது).
விதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை உலர் கலவையாகக் (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 விகிதத்தில் கலந்த கலவை) கலந்து வைக்க வேண்டும்.
விதைச் சேமிப்பு
விதைகளின் ஈரப்பதத்தினை 10 முதல் 12 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்
விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
விதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்ககாக சேமித்து வைக்கலாம்.
சேமிப்பின் இடைக்கால விதை நேர்த்தி
விதை முளைப்புத் திறன், விதைச் சான்று அளிப்புக்கு தேவையான குறைந்த பட்ச முளைப்புத் திறனை விட 5-10 சதம் குறையும் போது விதைகளை 3.6 கிராம் டை சோடியம் பாஸ்பேட்டை 100 லிட்ர் நீரில் கரைத்த கரைசலில்
ஒருபங்கு விதைக்கு இரு பங்கு கரைசல் என்ற அளவில் 6 மணி நேரம் ஊற வைத்துப் பின் 8 சத ஈரப்பதம் வரும் வரை உலர்த்த வேண்டும்
Share your comments