வேளாண்மையின் அடிப்படை ஆதாரம் வளமான மண்ணாகும். பயிரின் வளர்ச்சி என்பது அதன் மண் வளத்தை பொறுத்தே அமைகிறது. மண் வளம் பேணுவும், மண் வளத்தை மேம்படுத்தவும், பராமரிக்கவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். காலநிலை மாற்றம், பருவம் தவறிய மழை, அதிக படியான இரசாயன உரங்களின் பயன்பாடு, நிலத்தடி நீர் வற்றி போகுதல் போன்ற பல காரணங்களினால் மண் வளம் நாளுக்கு நாள் குன்றி வருகிறது.
மண்வளத்தை பாதுகாப்பதன் மூலம் அனைவருக்குமான நிலையான உணவு உற்பத்தியை உறுதி செய்ய இயலும் என்பதால் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் (National Mission for Sustainable Agriculture (NMSA)) கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளாக "தேசிய மண்வள இயக்கம்" வேளாண் நிலங்களின் மண் வளத்தை உறுதி செய்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
மண்பரிசோதனையின் மூலம் மட்டுமே மண்ணின் தன்மையை அறிய முடியும். இதனால் மண்ணின் தன்மைகள், மற்றும் பண்புகளை சரியாக தெரிந்து கொள்ள முடியும். மண் பரிசோதனை அறிவியல் முறையாகும். மண்ணின் நிறைகுறைகளை சரியாக கண்டறிந்து முறையாகச் செயல்படுவதற்கு மண்பரிசோதனை மிக அவசியம்.
மண் பரிசோதனையின் முக்கியத்துவங்கள்
- மண் பரிசோதனை மூலம் மண்ணில் உள்ள பயிரூட்டங்களின் அளவுகளையும், மண்ணின் நிறைகுறைகளையும் தெரித்து கொண்டு அதற்கேற்ற இரசாயன உரங்களையும், சரியான அளவுகளையும் பரிந்துரைக்கிறது. இதனால் உரச் செலவை கனிசமாக குறைக்க முடியும்.
- மண்ணில் உள்ள களர், உவர் அமிலத்தன்மைகளை கண்டறிய உதவுத்துவதுடன் அதற்கு இடவேண்டிய ஜிப்சம் அளவையும் அமில நிலத்திற்கு இட வேண்டிய சுண்ணாம்பு அளவையும் துள்ளியமாகக் கண்டறிய முடிகிறது.
- மண்ணில் உள்ள கரையும் உப்புகளின் அளவுகளை கண்டறிந்து, அதற்கேற்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிட முடிகிறது. உப்பை தாங்கி வளரக்கூடிய சூரிய காந்தி பருத்தி போன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிட முடிகிறது.
- மண்ணில் உள்ள கரிமச்சத்து அளவுகளை அறிந்து அதற்கேற்ப கரிம உரங்களையும், உயிர் உரங்களையும் பயன் படுத்தி, வளங்குன்றா வகையில் மண்வளத்தை பராமரிக்க முடிகிறது.
மண் பரிசோதனைக்கு வேண்டிய உபகரணங்கள்
மண்வெட்டி, பிளாஸ்டிக் வாளி, பாலித்தீன் விரிப்பு அல்லது சுத்தமான பாலித்தீன்/ சணல் சாக்கு, துணிப்பை மற்றும் பாலித்தீன் பை போன்ற உபகரணங்களை மண் மாதிரி எடுக்க பயன்படுத்த வேண்டும்.
மண் மாதிரி எடுக்கும் முறை
ஒரு ஏக்கர் நிலத்தில் 15 செ.மீ ஆழம் (ஏர் முனை ஆழம்) வரையில் உள்ள மண்ணின் எடை ஒரு லட்சம் கிலோ கிராம் ஆகும். அதிலிருந்து அரை கிலோ மண் தான் 'மண் மாதிரியாக' எடுக்கப்படுகிறது. அதிலிருந்து வெறும் 30 கிராம் மண் தான் மண் கூடத்தில் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே கீழ் கண்ட முறைப்படிதான் மண் மாதிரி எடுக்க வேண்டும். அப்பொழுது தான் வயலில் உள்ள மொத்த மண்ணின் எல்லா தன்மைகளையும் சரியாகப் பிரதிபலிக்கு வகையில் மண் மாதிரி அமையும். இதனால் மண்பரிசோதனை முடிவுகள் சரியானதாக அமையும்.
ஒரு வயலில் குறைந்த பட்சம் 10 இடங்களில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். ஒரு வயலின் பரப்பளவு அதிகபட்சமாக ஐந்து ஏக்கராக இருக்கலாம். ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட வயலை பிரித்து தனித்தனியாக மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.
மண் மாதிரி எடுக்க வேண்டிய இடங்களில் புல், பூண்டுகளை கைகளால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். மேல் மண்ணை அப்புறப்படுத்திவிடக் கூடாது. அந்த இடத்தில் 'v' வடிவத்தில் ஒரு குழி தோண்ட வேண்டும். இந்த குழியின் ஆழம் மேற்கண்டவாறு பயிருக்கு பயிர் மாறுபடும். 'v' வடிவக் குழியின் ஒரு பக்கத்தில் கீழிருந்து மேலாக ஒரு செ.மீ கணத்திற்கு மண்ணை சுரண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு 10 இடங்களில் குழிகள் தோண்டி மண் மாதிரி எடுக்க வேண்டும்.
இவ்வாறு சேகரித்த மண் மாதிரிகளை ஒரு காகித விரிப்பின் மேல் போட்டு, நன்றாக கலக்க வேண்டும். இதிலிருந்து அரைக்கிலோ மண்ணை, கால் பங்கீடு (quartering) முறையில் பிரித்து எடுக்க வேண்டும். இதற்கு கீழ் கண்ட முறையை கடைபிடிக்க வேண்டும்.
காகித விரிப்பில் மண்ணை சீராகப் பரப்பி போட்டு, அதன் மீது குறுக்கும் நெடுக்குமாக + வடிவத்தில் இரண்டு கோடுகள் கை விரலால் போட வேண்டும். அப்போது மண் நான்கு கால் 1/4 பாகங்களாகப் பிரிந்து காணப்படும். அதில் எதிர் எதிரே உள்ள இரண்டு கால் பாகங்களை நீக்கிவிட்டு, மீதம் உள்ள இரண்டு கால் பாகங்களை மறுபடியும் ஒன்றாகக் கலந்து, மேற்கண்ட முறையில் மீண்டும் மண்ணை பிரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு பலமுறை செய்து, அரைக்கிலோ மண்ணை எடுக்க வேண்டும். இது அந்த வயலின் மண் மாதிரி ஆகும்.
இதை ஒரு பாலித்தீன் போட்டு கட்டி அதனை மற்றொரு பாலித்தீன் பை அல்லது துணிப்பைக்குள் போட வேண்டும். மண் மாதிரி விவர படிவத்தை பென்சில் கொண்டு நிரப்பி இரண்டு பைகளுக்கு இடையில் வைக்க வேண்டும்.
அதில் கீழ் கண்ட விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
- விவசாயின் பெயர் மற்றும் முழு விவரம்.
- வயலின் சர்வே என்/ வயலின் பெயர்
- பாசன வசதி (கிணற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், ஆற்றுப்பாசனம்).
- முந்தின பயிர் மற்றும் அதற்கு மேம்பட்ட உரங்களின் அளவுகள்.
- அடுத்து பயிரிடப்போகும் பயிர்.
- நிலத்தில் குறிப்பிடும் படியான பிரச்னையேதேனும் இருந்தால், அது பற்றிய விவரம் தரவேண்டும்.
மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பயிருக்கு இட வேண்டிய சரியான உர அளவுகள் கொடுக்கப்படும். இதன் மூலம் உரச்செலவை சிக்கனப்படுத்தி, சாகுபடி செலவை குறைக்க முடியும். எனவே இனிவரும் காலங்களில் விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Share your comments