விருத்தாசலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 5 லட்சம் முந்திரி கன்றுகள் மற்றும் 10 லட்சம் மிளகாய், கத்தரி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விருத்தாசலத்தில், காட்டுக்கூடலுார் செல்லும் சாலையில், 25 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இங்கு வி.ஆர்.ஐ.,-3 வீரிய ரக முந்திரி, மா, பலா, கொய்யா, பப்பாளி, கத்தரி, மிளகாய், கேந்தி மற்றும் கீழாநெல்லி, முடக்கத்தான், துாதுவளை, வல்லாரை, பிரண்டை, துளசி, கற்றாழை, கற்பூரவள்ளி, நிலவேம்பு ஆகிய 9 வகையான மூலிகை செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மரக்கன்றுகள் உற்பத்தி (Production of saplings)
அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா, சிந்துாரா, காலப்பாடு, நீலம் என 6 வகையான மா கன்றுகள்; லக்னோ 49, சிட்டிடார் வகை கொய்யா, பாலுார் 1 ரக பலா, ரெட் லேடி ரக பப்பாளி கன்றுகள், மென்தட்டு ஒட்டு, பக்க ஒட்டு, பதியம், குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லுார், மங்களூர் உட்பட மாவட்டம் முழுவதும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களால் பாதிக்கும் விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம் மூலம் கன்றுகள், செடிகள் உற்பத்தி செய்து மானியத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், நேரடியாகவும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் (2022 - 2023) தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் 5 லட்சம் முந்திரி கன்றுகள், 10 லட்சம் மிளகாய் மற்றும் கத்தரி செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக, முந்திரி கன்றுகளில் களையெடுத்து, உரம் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாத வளர்ச்சிக்குப் பின், முந்திரி கன்றுகளில் ஒட்டு கட்டும் பணி துவங்க உள்ளது.
அதன்பின், ஒன்றரை மாதங்களில் முந்திரி கன்றுகள் விற்பனைக்கு வந்து விடும். அதுபோல, 52 லட்சம் மிளகாய் செடிகள், 49 லட்சம் கத்தரி செடிகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்து, நிழல்வலை கூடத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை, இன்னும் 10 நாட்களில் வளர்ந்து விடும் என்பதால், விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். முந்திரி கன்றுகள் மானியத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்காக, சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சம்பந் தப்பட்ட தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பதிவு செய்து, பெற்றுக் கொள்ள வேண்டும். நேரடி விலையில் ஒரு கன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
மானியம் (Subsidy)
அதுபோல், மிளகாய், கத்தரி கன்றுகள் மானியத்தில் இலவசமாகவும், நேரடியாக கன்று ஒரு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இவற்றை, பண்ணை மேலாளர் ஜூமானா ஹசின், உதவி அலுவலர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள், பண்ணையில் கன்றுகள், செடிகளை பராமரித்து வருகின்றனர். இது குறித்து தோட்டக்கலை அலுவலர் கூறுகையில், நடப்பாண்டுக்கு 5 லட்சம் முந்திரி கன்றுகள், 10 லட்சம் மிளகாய், கத்தரி கன்றுகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
அதில், 10 நாட்களில் மிளகாய், கத்தரி கன்றுகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். மானியத்தில் பெற தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம். நேரடி விலையில் முந்திரி கன்று 40 ரூபாய்க்கும், மிளகாய், கத்தரி கன்றுகள் தலா ஒரு ரூபாய்க்கும் வழங்கப்படும் என்றார்.
மேலும் படிக்க
கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேரவில்லை: விவசாயிகள் கவலை!
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன்: முதன்மைச் செயலாளர் அறிவிப்பு!
Share your comments