பொங்கல் பண்டிகையின்போது தயாரிக்கப்படும் பொங்கலில் சேர்க்கப்படும் பொருட்களில் தித்திக்கும் வெல்லம் முக்கியமானது. அத்தகைய வெல்லம் தயாரிக்கும் பணிகள் தமிழகத்தின் பலபகுதிகளிலும் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரும்பு சாகுபடி (Sugarcane cultivation)
தை திருநாளான பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் மண்டை வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அலங்காநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகள் தங்களது நிலங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடுவார்கள். அலங்காநல்லூர் பகுதியில் கல்லணை, கோட்டைமேடு, வலசை, செம்புகுடிப்பட்டி, சம்பக்குளம் மற்றும் கொண்டையம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் ஆலை கரும்புகளை சாகுபடி செய்திருந்தனர்.
வெல்லம் தயாரிப்பு
தற்போது நன்கு விளைச்சல் கண்டுள்ள கரும்புகளை அறுவடை செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அதில் இருந்து மண்டை வெல்லம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மண்டை வெல்லம் பொங்கல் வைக்க பயன்படும் முக்கிய பொருளாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் இருந்து வந்தாலும் அலங்காநல்லூர் பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லத்திற்கு தனி சிறப்பு உண்டு.
வெளி மாநிலங்களுக்கு (To other states)
இதுகுறித்து விவசாயி கல்லணை ராஜா கூறியதாவது:-
விவசாய பணிகளுக்கு கூலிக்கு விவசாயிகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இருப்பினும் வருடம்தோறும் கரும்பு சாகுபடிச் செய்து பழக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்து பயிரிட்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு சுமார் 40 டன் வரை ஆலை கரும்பு அறுவடையாகிறது.
இந்த ஆலை கரும்பை வெல்லமாக காய்ச்சி பக்குவப்படுத்த பட்டு மண்டை வெல்லங்களாக மொத்த வியாபாரத்திற்கு மதுரைக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
விலை (Price)
1 கிலோ வெல்லம் ரூ.40-க்கும், 10 கிலோ ரூ.400-க் கும் விலை போகிறது. இதில் 1 டன் கரும்பிற்கு 90 கிலோ வரை வெல்லம் கிடைக்கிறது. 1 ஏக்கருக்கு சுமார் 3 ஆயிரத்து 600 கிலோ வரை வெல்லம் கிடைக்கிறது.
கொள்முதல் (Purchase)
இதில் போதிய வருமானம் இல்லை என்றாலும் தொடர்ந்து பாரம்பரியமாகத் தைப் பொங்கலுக்காகவே வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இனி வரும் காலங்களில் கரும்பு விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு அரசு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
கரும்பு விளைச்சலை அதிகரிக்க தேவை சிலிக்கான், முழு விவரம் இதோ!
Share your comments