அதிகமானத் தழைச்சத்து இடுவதைத் தவிர்ப்பதன் மூலம் நெல்லியில் தோன்றும் புகையான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில், புகையான் பூச்சி தாக்குதல் அறிகுறி தென்படுகிறது. இதனால், பயிர், வட்ட வட்டமாக தீயில் கருகியது போல் காணப்படுகிறது.
இதையடுத்து புகையான் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்துதற்கான வழிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
-
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்.
-
பயிரின் தண்டு உடைந்து சாய்ந்து விடும்.
-
மகசூல் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், தண்டு பகுதியில் துர்நாற்றம் வீசும்.
-
நன்கு வளர்ந்த புகையான் பூச்சிகள் பழுப்பு நிறத்தில் நெல்பயிரின் தண்டுப்பகுதியின் அடியில், நீர் பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு, தண்டிற்குள் உள்ள சாற்றை உறிஞ்சுவிடும்.
-
தண்டுப்பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்ந்து விடும்.
-
தண்ணீர் தேங்கியுள்ள வயல்களிலும், தழைச்சத்து அதிகம் இட்ட வயல்களிலும், புகையான் பூச்சிகள் அதிகமாக காணப்படும்.
-
நெல்லில் பால் பிடிக்கும் முன்பே பயிர் காய்ந்து பதராக மாறிவிடும்.
கட்டுப்பாட்டு முறைகள்
-
புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த, அதிகஅளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.
-
நீர் வடிந்த பின்தான் மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.
-
நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும்.
-
வயலில் உள்ள தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, வேர்களில் நன்கு படும்படியாக, பூப்பதற்கு முன், 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், புப்ரோபெசின் 25 எஸ்.சி., 300 மில்லி, இமிடா குளோப்ரிட் 17.8 சதவீதம் எஸ்.எல்., 40 மில்லி, தயோ குளோப்ரிட் 40 எஸ்.சி., 500 மில்லி, தயோமிதாக்சாம் 25 டபுள்யு.ஜி, 40 கிராம், பெனோகார்ப், 50 சதவீதம் ஈ.சி 500 மில்லி, பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி., 500 மில்லி, குளோரான்ட்ரேனிலிப்ரோல் 18.5 சதவீதம், எஸ்.சி 60 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தைத் தெளிக்க வேண்டும்.
அளவு
-
கைத்தெளிப்பான் மூலம் ஏக்கருக்கு, 200 லிட்டர் வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
-
பூத்த பின் நீரை வடிகட்டி விட்டு, ஏக்கருக்கு, 10 கிலோ கார்பாரில், 10 சதவீத தூளை, பயிரின் அடிப்பகுதியில் படும்படியாக தூவ வேண்டும்.
-
புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான, செயற்கை பரிதராய்டுகள், மிதைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
-
விவசாயிகள், தாங்களே ஏதாவது ஒரு மருந்தை கடையில் வாங்கித் தெளிக்காமல், அருகிலுள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி, வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கும் பூச்சி மருந்தை வாங்கி தெளிக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த அறிக்ககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
எந்திர நடவு பணிக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்!
பழங்குடியின விவசாயிகளுக்கு தாவர நூற்புழுக்கள் குறித்து ஒருநாள் பயிற்சி முகாம்!
Share your comments