அனைத்துத் தரப்பினராலும் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுக்கு தனிச்சுவை கிடைப்பதே இதற்கு காரணம். பூரி என்றால், அதன் ஜோடி எந்த மாநிலமானாலும் உருளைக்கிழங்குதான். இதனை வேண்டாம் என்று ஒதுக்குபவர்களின் எண்ணிக்கை சொற்பமே.
அதனால்தான் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு செடியின் வேரில் இருந்து பெறப்படும் இக்கிழங்கு, மாவுப்பொருள் நிறைந்தது.
ரகங்கள் (Variety)
உருளைக்கிழங்கில் குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர், குப்ரி சோகா மற்றும் குப்ரி கிரிராஜ் ஆகியவை பயிரிட ஏற்ற இரகங்கள்.
பருவம் (Season)
மலைப்பகுதிகளுக்கு மார்ச் – ஏப்ரல், ஆகஸ்ட் – செப்டம்பர், ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.சமவெளிப்பகுதிகளை பொருத்தவரை அக்டோபர்-நவம்பர் மாதங்கள் ஏற்ற பருவம்
மண் கலவை செய்தல் (Sand)
உங்கள் பகுதியில் உள்ள மணலை சேகரித்துக்கொள்ளவும். களிமண் கலவையாக இருந்தால் சிறந்தது. இரண்டு பங்கு மணலுடன், 2 பங்கு கொ-கோ பிட்(Cocopit)டை சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் கம்போஸ்ட், வேப்பம்புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, மண்புழு உரம் ஆகியவற்றை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்க்கவும். வேர்த்தாக்குதலைத் தடுப்பதற்காக டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஆகியவற்றைத் தேவையான அளவு கலந்துவிடவும். இவற்றை கலந்ததும் மண் பொலபொலவென உருளைக்கிழங்கு மண்ணில் இறங்க ஏதுவானதாக மாறிவிடும். இதனை 2 நாட்களுக்கு அப்படியே விட்டவிட்டால், மண்கலவை தயார்.
விதைப்பு (Sowing)
கடைகளில் இருந்து நாம் வாங்கி சேகரித்த பழைய உருளைக்கிழங்கை வீட்டில் இருள்சூழ்ந்த இடத்தில் வைத்திருந்தால் அவை முளைத்துவிடும். இதனைக் கொண்டு உருளைக்கிழங்கு செடியை வளர்க்க முடியும். கடைகளில் கிடைக்கும் பெரிய அளவிலான Grow Bagகை வாங்கிக்கொள்ளவும். இந்த பையின் வாய்ப்பகுதிகளை மடித்துவிட்டு மண்ணை போட்டால்தான், கிழங்கு அடிவரை செல்ல முடியும்.
இதன் அடியில், தேங்காய் மட்டைகளை போட்டுவிட்டு அதன்மேல் மண் கலவையைக் ஓரளவுக்குப் போட வேண்டும். தேங்காய் மட்டைகள் தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்கும். மண்கலவை எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அவ்வாறு இருப்பது கிழங்கு வகைகளுக்கு மிகவும் நல்லது. அதிக மகசூலைக் கொடுக்கும்.
நீர்மேலாண்மை (Water Management)
நடவுக்குப் பிறகு, வாரத்திற்கு ஒருமுறை தண்ணீரைத் தெளிக்கவும். அதிகளவு தண்ணீர் விட்டால், உருளைக்கிழங்கு அடியில் அழுகிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
15 நாள் கழித்த பிறகு செடி நன்கு வளர்ந்திருக்கும். இவ்வாறு செடி வளர வளர மேலே மேலே மண்கலவையைப் போட்டுக்கொண்டே வரவேண்டும். இத்துடன் ஒரு இன்ச் பைப்(Pipe)யை மண்ணில் சொருகி, அதற்குள் மணலையும் போட்டு, தண்ணீரை ஊற்றவும். செடி தனக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ளும்.
களை எடுத்தல்
முதல் களை எடுப்பு 45வது நாளில் செய்ய வேண்டும். விதை விதைத்த 60 நாட்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அறுவடை (Harvetsing)
விதைத்த 120 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யலாம். பை ஒன்றிக்கு ஓரிரு உருளைக்கிழங்கை விதைத்தாலே 15 உருளைக்கிழங்கு வரைக் கிடைக்கும். அதாவது 15 கிலோ பை என்றால் 3 கிலோவிற்கு குறையாமல் உருளைக்கிழங்கு கிடைக்கும்.
உருளைக் கிழங்கு மருத்துவப் பயன்கள்(Medical benefits)
உருளைக்கிழங்கில் கலோரிகள், பொட்டாசியம், வைட்டமின் C, தாது உப்புகள், மாவுச்சத்துகள், நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.
காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.
தீப்புண்களுக்கு உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும், மேலும் அந்த தடமும் விரைவில் மறைந்துவிடும்.
கீழ்வாதம், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த உருளைக் கிழங்கை தோலுடன் பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டால் முற்றிலும் குணமாகும்.
முகம் புத்துணர்ச்சியாக இருக்க பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும்.
தகவல்
வெங்கடேஸ்வரன்
இயற்கை விவசாயி
மேலும் படிக்க...
விளைச்சலை அதிகரிக்கும் டானிக் எது தெரியுமா? விபரம் உள்ளே!
தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!
Share your comments