கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்முதலுக்கு வராததால் தஞ்சையில் 10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மக்காச்சோளம் அறுவடை பணிகள் மும்முரம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தட்டாண்விடுதி, அம்மன்குடி, உஞ்சியவிடுதி, காரியவிடுதி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் பயிரிடப்படு தற்போது இதற்கான அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மக்காச்சோளம் பெரும்பாலும் வெளிமாவட்டங்களுக்குத் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
கொள்முதலில் தேக்கம்
இந்நிலையில், கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாகக் கடந்த ஒரு மாதமாக வெளிவட்டங்களில் இருந்து சோளத்தை கொள்முதல் செய்ய யாரும் வருவது இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட 10,000 கிலோ மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கருத்து
இது குறித்து ஒரத்தநாடு விவசாயிகள் கூறுகையில், கடந்த பிப்ரவரி சுற்றுவட்டார பகுதியில் சோளம் பயிரிட்டு ஜூலை மாதம் அறுவடை செய்யப்படுகிறது. கடந்தாண்டு பொள்ளாச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சையில் உள்ள மொத்த வியாபாரிகள் சோளத்தை மொத்தமாகக் கொள்முதல் செய்து அதனை வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்தனர். மக்காச்சோளத்தைக் கோழி தீவனம் மற்றும் பிஸ்கட் போன்ற உணவு பண்டங்களைத் தயாரிப்பதற்காக வாங்கி செல்வர். தற்போது கொரோனா தொற்றால் வெளிவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் ஒரத்தநாடு பகுதியில் சுமார் 10,000 கிலோ மக்காச்சோளம் தேங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
கடந்தாண்டு சோளம் பயிர்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,700 விற்பனை செய்து வந்த நிலையில், இந்தாண்டு குவிண்டால் ரூ.1400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.25,000 வரை செலவு செய்த விவசாயிகள். அவர்கள் செலவு செய்த தொகையாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால், பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பல பகுதிகளில் அமெரிக்கன் படைப்புழு தாக்கியதால் மக்காச்சோளம் விளைச்சலிலும் 50 சதவீதம் குறைந்து விட்டது. எனவே நெல்லுக்கு நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது போல், சோள பயிருக்கும் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை - கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் - மலர் விவசாயிகள் மகிழ்ச்சி!
மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!
Share your comments