பிரதமரின், நுண்ணீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத அல்லது திட்டத்தில் இணையாத சிறு குறு விவசாயிகள் உடனடியாக தங்களை இணைத்துக் கொண்டு கட்டாயமாக பயனடைய வேண்டும் என மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
"ஒரு துளி அதிக பயிர்" (Per Drop More Crop) என்ற கூற்றுக்கு ஏற்ப இன்று பெரும்பாலான விவசாய நிலங்கள் நுண்ணீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன. இதற்காக மத்திய அரசு சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்குகிறது. இதன் மூலம் விவசாயிகள் ஒவ்வொரு துளி நீரையும் விரையமாக்கல் முழுமையாக பயிர்களுக்கு தர இயலும். அத்துடன் வேளாண் நிலங்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம்.
நுண்ணீர்ப்பாசனத்திட்டத்தின் செயல்பாட்டிற்கு உதவும் வகையில் விவசாயிகளுக்காக துணை நீர்மேலாண்மைத்திட்டம் செயல்படுகிறது இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் முதலில் தங்களது நிலத்தில் ஆழ்துளைக்கிணறுகள், நீர்த்தேக்க தொட்டிகள், நீரை கடத்தி செல்வதற்கு தேவையான எலக்ட்ரிக் மோட்டார் அல்லது டீசல் பம்புகள் போன்றவற்றை அமைக்க வேண்டும். பின்னேற்பு மானியமாக எலக்ட்ரிக் மோட்டார் அல்லது டீசல்பம்புகள் அமைப்பதற்கு தலா ரூ.15000 வரையும், பாசன குழாய்கள் அமைப்பதற்கு ரூ.10000 வரையும், நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பதற்கு ரூ.40000 வரையும் மானியம் வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் தோட்டக்கலை பயிர்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களுக்கு மானியம் பெற முடியும். தற்போது தென்னை மற்றும் கரும்பு போன்ற பயிர்களுக்கும் சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன. தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூவுவான் போன்ற பாசனக்கருவிகளை அமைக்கும் கரும்பு விவசாயிகளுக்கு இவ்வாண்டு முதல் அதிக பட்சமாக ரூ.1,36,000 வரை மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களைவிட கூடுதலான உபகரணங்கள் தேவைப்படும் பட்சத்தில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரைவோலையாக வழங்கவேண்டும்.
நுண்ணிர்ப்பாசனத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் கணிசமான பலனை பெற இயலும். பயிர்களுக்கு தேவையான உரங்களை சொட்டு நீர் பாசன மூலம் நேரிடையாக செடியின் வேர்ப்பகுதிக்கு செலுத்துவதால் உங்களுக்கான செலவு சேமிக்கப் படுவதுடன், உரங்கள் வீணாவதும் தடுக்கப் படுகிறது. இதனால் விவசாயத்தில் மகசூல் மற்றும் தரம் அதிகரிக்கிறது. இத்துல்லியமான நீர்ப்பயன்பாட்டினால் 70 சதம் வரை நீர் சேமிக்கப்படுகிறது. வேலையாட்கள், நீர்ப்பற்றாக்குறை பற்றாக்குறை ஆகியன வெகுவாக குறைந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தில் உள்ள திருவாதவூர் மற்றும் கீழவளவு ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளைக்கிணறுகள், பம்ப்செட் மற்றும் நீர்கடத்தும் குழாய்கள் அமைப்பதற்கும் பின்னேற்பு மானியங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இதுவரை நுண்ணீர்ப்பாசனம் அமைக்காதவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் மேலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளவும்.
- சிறு குறு விவசாயி சான்று
- ஆதார் கார்டு நகல்
- ரேசன்கார்டு நகல்
- சிட்டா நகல்
- அடங்கல் அசல் (பாசன ஆதாரம் குறிப்பிடப்படவேண்டும்)
- பாஸ்போர்ட்சைஸ் போட்டோ-2
Share your comments