மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராமத்திலிருந்து ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அறிவியல் வளர்ச்சியின் அடுத்த பரிணாமத்தை நோக்கி தகவல் தொழில்நுட்பம், ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்தும் விண்ணில் பல செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம்- மார்ட்டின் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் சோன் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து ராக்கெட் ஏவுதலை ஏற்பாடு செய்ய திட்டமிட்டது.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து 150 சிறிய ரக செயற்கைகோள்களை தயாரித்தனர். முன்னதாக போட்டித்தேர்வு மூலம் இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செயற்கைக்கோள், ராக்கெட் ஏவுதல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராமத்திலிருந்து இன்று காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் மூலம் வானிலை, வளிமண்டல நிலை கதிர்வீச்சு தன்மை குறித்த ஆராய்ச்சி தகவலை பெற இயலும்.
ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்த கூடியதாகவும் சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும் செயற்கைகோள்களின் தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆனந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி , ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்கைக்கோள் வானில் ஏவப்பட்டதன் மூலம் ஒரு செயற்கைக்கோள் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் பொறியாளர்களை பள்ளிகளிலேயே உருவாக்க வேண்டும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி துறை குறித்த ஆர்வத்தையும், அறிவையும் மேம்படுத்த முடியும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க:
என்னங்க சொல்றீங்க..24 வருஷமா தேங்காயை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறாரா?
ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவுமில்லை-ஒன்றிய அமைச்சர் விளக்கம்
Share your comments