தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அதுமட்டுமல்லாமல் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தியே தீர்வோம் என முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் இன்று ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்பட வேண்டியவை குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு வயது நிரம்பியவர்களை மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கை
முன்பள்ளிக் கல்வியில் இரண்டு ஆண்டுகள் படிக்கும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தும் நடைமுறையைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டமானது மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (SCERT) வடிவமைக்கப்பட்டு, அதன் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIETs) மூலம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை
“தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படை கட்டத்திலே குழந்தைகளின் கற்றலை வலுப்படுத்த பரிந்துரைக்கிறது. 3 முதல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஐந்து வருட கற்றல் வாய்ப்புகளை அடித்தளமாக கொண்டுள்ளது. இதில் மூன்று வருட முன்பள்ளி கல்வி மற்றும் இரண்டு வருட ஆரம்ப கல்வியில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஆகியவை அடங்கும்," என்று கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கையானது, முன்பள்ளி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் தடையற்ற கற்றல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது.
அங்கன்வாடிகள் அல்லது அரசு/அரசு உதவி பெறும், தனியார் மற்றும் அரசு சாரா முன்பள்ளி மையங்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான பாலர் கல்வியை மூன்றாண்டுகளுக்கு வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று கல்வி அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாடு அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஆரம்பத்திலேயே தமிழ்நாடு அரசு அனுமதிக்காமல் புறக்கணிக்கப் போகிறதா அல்லது நீட் தேர்வு போன்று வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளப் போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க
வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு!
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! அமலுக்கு வரப் போகுது புதிய விதி!
Share your comments