பி.எம். கேர்ஸ் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.2000கோடியை 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு அதிகபட்ச எண்ணிக்கையிலான வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொரோனோ பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா பரவலில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், நோயில் இருந்து மக்களை குணப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் கடுமையாகப் போராடி வருகின்றன.
கொரோனா நிவாரண நிதி
இந்நிலையில் கொரோனா ஒழிப்பு பணியில் மாநில அரசுகளுக்கு கைகொடுக்கும் நோக்கில், கொரோனோ நிவாரண நிதிக்காக உருவாக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் (PM Cares Fund) மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து ரூ. 2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
50 ஆயிரம் வென்டிலேட்டர்கள்
இந்த நிதியைக் கொண்டு 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) தயாரிக்கப்பட உள்ளது. எஞ்சிய 20 ஆயிரத்தில் அக்வா ஹெல்த்கேர் (AgVa Healthcare) 10 ஆயிரம், ஏஎம்டிஇசட் பேசிக் (AMTZ Basic) 5,650, ஏஎம்டி இசட் ஹை என்ட் (AMTZ High End) 4000, அலைட் மெடிக்கல் (Allied Medical) 350 வென்டிலேட்டர்கள் தயாரிக்க உள்ளன.
இதில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 2,923 வென்டிலேட்டர்களில், மகாராஷ்டிரா அரசுக்கும், டெல்லி அரசுக்கும் தலா 275 ம், குஜராத்திற்கு 175ம், பீகாருக்கு 100ம் வழங்கப்பட்டுவிட்டன.
இதேபோல் கர்நாடக அரசுக்கு 90 வென்டிலேட்டர்களும், ராஜஸ்தானுக்கு 75 வென்டிலேட்டர்களும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஜூன் மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு தேவைப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
புலம்பெயர் தொழிலாளர் நலன்
இதேபோல், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காகவும் மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு, மருத்துவ வசதி மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக இந்த நிதி வழங்கப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு 83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிராவிற்கு 181 கோடி ரூபாயும், உத்திரபிரதேசத்திற்கு 101 கோடி ரூபாயும், குஜராத்திற்கு 66 கோடி ரூபாயும், பீகாருக்கு 51 கோடி ரூபாயும் நிதி வழங்கப்படுகிறது.
அதேநேரத்தில் மத்திய பிரதேசத்திற்கு 50 கோடி ரூபாயும், ராஜஸ்தானுக்கு 50 கோடி ரூபாயும், கர்நாடகத்திற்கு 34 கோடி ரூபாயும் நிதி வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் - தடுப்பது எப்படி!!
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் புதிய திட்டம் !!
Share your comments