சர்வதேச விதை கூட்டமைப்பின் முதன்மை நிகழ்வான, ISF World Seed Congress 2024-யினை ISF மற்றும் டச்சு நேஷனல் ஆர்கனைசிங் கமிட்டி (Dutch National Organizing Committee- Plantum) இணைந்து மே 27 முதல் வருகிற மே 29 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இந்த நிகழ்வில் East-West Seed குழுமத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகி க்ரூட், (Maaike Groot) இந்தியாவில் பெண் விவசாயிகளை மனதார பாராட்டி பேசியுள்ளார்.
ISF World Seed Congress 2024-நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக ISF-யின் 100 வது ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கிரிஷி ஜாக்ரனின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான எம்.சி.டொம்னிக் பங்கேற்று பல சிறப்பு விருந்தினர்களிடம் நேர்க்காணல் மேற்கொண்டிருந்தார். அந்த வகையில், East-West Seed குழுமத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகி க்ரூட் உடன் எம்.சி.டொம்னிக் மேற்கொண்ட நேர்க்காணலின் விவரம் பின்வருமாறு.
42 ஆண்டுக்கால பங்களிப்பு:
க்ரூட் கூறுகையில், “East-West Seed குழுமம் 42 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையால் தொடங்கப்பட்டது. நிறுவனம் தொடக்கம் முதலே ஒரு தெளிவான பார்வையினைக் கொண்டுள்ளது: சிறு விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதலில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். தனது தந்தை விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் பற்றிய தனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்துக் கொண்டார். பிலிப்பைன்ஸிலிருந்து தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் இறுதியாக இந்தியாவுக்கு பயணம் செய்து பலத்தரப்பட்ட விவசாயிகள் மேற்கொள்ளும் நுட்பங்களை கண்டறிந்தார்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகையை கொண்டுள்ளது, அதற்கேற்ப வேளாண் தொழிலில் முன்னெடுக்க நிறைய நடவடிக்கைகள் உள்ளன. இந்திய விவசாயிகளின் வாழ்வில் எங்களால் பங்களிக்க முடியும் என்று நாங்கள் உணர்கிறோம். குறிப்பாக எங்கள் விதைகள் நோய் எதிர்ப்பு, சீரான தன்மை மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றன. காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக சிறந்த ரகங்களை உருவாக்கி வருகிறோம்."
"மேலும், விவசாயிகள், அரசு அதிகாரிகள் மற்றும் விதைக் கடைகளின் உரிமையாளர்களுக்கு விதை வகைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.
பெண் விவசாயிகளுக்கு முக்கியத்துவம்:
இந்தியாவில் East-West Seed குழுமத்தின் செயல்பாடு பற்றி அவர் பேசுகையில், “நாங்கள் மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்தில் தொடங்கி, பின்னர் கர்நாடகாவின் பெங்களூரில் விதை உற்பத்திக்காக ஒரு தளத்தை அமைத்தோம். விவசாயத்தின் முதுகெலும்பு பெண்கள் என்பதை உணர்ந்து பெண் விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். அவர்களுக்கு ஆதரவளித்தால், பொருளாதார சுதந்திரத்தினை பெண் விவசாயிகள் அடைவதோடு, அத்துடன் சமூகங்களுக்கு அறிவின் ஆதாரமாகவும் பணியாற்றுவார்கள். நிறுவனம் விவசாயத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்து வருவதாகவும்” தெரிவித்தார்.
"எங்கள் விதைகளால் 23 மில்லியன் விவசாயிகள் பயனடைகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்களுக்கு தேவையான உணவினை உற்பத்தி செய்வதில் எங்களின் பங்கு உள்ளது. வெவ்வேறு நாடுகளில் வேலை செய்வதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் நிலையான வணிகத்தை உருவாக்க முடிந்தது, ”என்றும் Maaike Groot குறிப்பிட்டார்.
Read more:
விதை பாதுகாப்பின் அவசியம் குறித்த ISF World Seed மாநாடு நிறைவு!
Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Share your comments