தீபாவளிப் பண்டிகைக்கு (Diwali) முன் 25 ஆயிரம் டன் வெங்காயம் (Onion) இறக்குமதி செய்யப்பட்டு விடும். ஏற்கெனவே 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்குள் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்தார்.
உச்சத்தில் வெங்காய விலை!
வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக கடுமையாக மழை (Heavy Rain) பெய்தது. இதனால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்து, விலை படிப்படியாக உயரத் தொடங்கி, உச்சகட்டமாக கிலோ வெங்காயம் 100 ரூபாயைத் தாண்டியது. இதையடுத்து, வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் வைக்க, இறக்குமதிக்கு அனுமதித்த மத்திய அரசு, ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து மொத்த வியாபாரிகள் (Wholesalers) வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டனர்.
அமைச்சர் பியூஷ் கோயல கூறியது:
சந்தையில் அதிகரித்துவரும் வெங்காயம், உருளைக்கிழங்கின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாபெட் (Nabet) அமைப்பு வெளிநாடுகளில் இருந்து, வெங்காயத்தை இறக்குமதி (Import) செய்யத் தொடங்கிவிட்டது. இதுவரை தனியார் விற்பனையாளர்கள் மூலம் 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியாகியுள்ளன. தீபாவளிக்குள் 25 ஆயிரம் டன் வெங்காயம் வந்துவிடும் என நம்புகிறேன். பூடானிலிருந்து 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் சந்தைகளில் விற்பனையை அதிகப்படுத்தி, விலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
படிப்படியாக விலை குறைதல்:
சில்லறை விலையில் வெங்காயத்தின் விலை கடந்த 3 நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து கிலோ ரூ.65க்கு விற்பனையாகிறது. விலை உயராமல் தடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்றுமதி சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு, இறக்குமதி அதிகப்படுத்தப்பட்டது. நவம்பரிலிருந்து கரீப் பருவத்தில் எடுக்கப்படும் வெங்காயம் சந்தைக்கு வரத் தொடங்கும். அவை வந்துவிட்டால் வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறையும். நாபெட் மூலம் எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மொத்த விற்பனையாளர்கள் வெங்காயத்தைப் பதுக்கிவிடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு (Tracking) நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நாபெட் அமைப்பு தனது இருப்பிலிருந்து 36,488 டன் வெங்காயத்தை இதுவரை விடுவித்துள்ளது''.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
Share your comments