திண்டுக்கல் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 290 மெட்ரிக் டன் பச்சை பயறு கொள்முதல் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் ஆதார விலைத்திட்டத்தின் கீழ் (PSS) 2022-23- ஆம் ஆண்டின் ராபி பருவ காலத்தில் அறுவடை செய்யப்படும் பச்சை பயறு விளைப்பொருளை 01.03.2023 முதல் 29.05.2023 வரையிலான காலத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 290 மெ.டன் பச்சை பயறு கொள்முதல் செய்திட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பச்சை பயறு 496 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ”ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திண்டுக்கல் ரோடு, பழனி, (விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அலைபேசி எண்-8946099709)” என்ற முகவரியில் செயல்படும் விற்பனைக்கூடத்தில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள பச்சை பயறு கீழ்க்காணும் அட்டவணையிலுள்ள நியாயமான சராசரி தரத்தின்படி (Fair Average Quality) இருத்தல் வேண்டும். அதன்படி, அதிகபட்ச வரம்பு (கலப்பு சதவிகித எடையளவு குவிண்டாலுக்கு) இதரப் பொருட்கள் கலப்பு 2 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 3 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 3 சதவீதம், முதிர்வடையாத மற்றும் சுருங்கிய பருப்புகள் 3 சதவீதம், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 4 சதவீதம், ஈரப்பதம் 12 சதவீதம் இருத்தல் வேண்டும்.
அரசால் உளுந்து விளை பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.7,755 (குவிண்டால்) க்கு கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகளின் அடங்களில் மேற்படி சாகுபடி பரப்பு இடம் பெற்றிருக்க வேண்டும். மேற்படி, கொள்முதலுக்கு கொண்டு வரும் விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா மற்றும் அடங்கலும், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலும் கொள்முதல் மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதைப்போல் திண்டுக்கல் மாவட்டம், பழனி, வத்தலகுண்டு மற்றும் நத்தம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்களுக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஒன்றிய அரசின் உதவியுடன் தென்னை அதிகம் பயிரிடக்கூடிய 26 மாவட்டங்களில் அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையான குவின்டால் ஒன்றுக்கு ரூ.10,860 வீதம் நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மேற்சொன்ன வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
ரேஷன் கார்டில் பெயர் திருத்தணுமா? காஞ்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் எங்கே ?
உடம்பை குறைக்கிறேனு உணவை தவிர்ப்பதா? இந்த 4 ஐட்டம் போதும் டயட்டுக்கு
Share your comments