பயிர்க்காப்பீடு வழங்குதல் போன்றவற்றில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட், (Agriculture Insurance Company of India Limited- AIC) சமீபத்தில் பெண்களை மையமாகக் கொண்ட 3 காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
AIC- கிராமப்புற பெண்களின் பொருளாதார நிலையினை வலுப்படுத்தும் நோக்கத்தோடு அவர்களை மையமாக கொண்ட காப்பீட்டுத் திட்டங்களை கடந்த மார்ச்-08 ஆம் தேதி உலக மகளிர் தினத்தன்று அறிமுகப்படுத்தியது. திட்டங்களின் முறையே, கிரஹலக்ஷ்மி ஆய் சுரக்ஷா, மத்ஸ்ய ஆஜீவிகா சுரக்ஷா மற்றும் சம்பூர்ணா பசுதன் கவாச் ஆகும். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் யாரெல்லாம் பயனடைய முடியும், காப்பீட்டுத் தொகை எவ்வளவு போன்ற விவரங்கள் பின்வருமாறு-
1. கிரஹலக்ஷ்மி ஆய் சுரக்ஷா: (Grahalakshmi Aay Suraksha)
'கிரஹலக்ஷ்மி ஆய் சுரக்ஷா' என்று பெயரிடப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டமானது 'Heat Index Cover' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது MNREGA பெண் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியங்களை பெறமுடியாத காலச்சூழ்நிலைகளில் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. எளிமையான வகையில் குறிப்பிட வேண்டும் என்றால், ”அதிக வெப்பநிலையால் வேலைவாய்ப்பை இழக்கும் கிராமப்புற பெண்களுக்கு நன்மைகளை வழங்குகிறது”.
இந்த காப்பீடு அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது மார்ச் 16 முதல் ஜூன் 16, 2024 வரை செயல்பாட்டில் இருக்கும். தகுதியான பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.4000 வழங்கப்படும். இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியம் ஒரு நபருக்கு தோராயமாக ரூ.200 ஆகும்.
தகுதிகள் என்ன?
MNREGA - பணி அடையாள அட்டை வைத்துள்ள பெண்கள் மட்டுமே இந்தக் காப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள். MNREGA வேலை அட்டை வைத்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, AIC இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது காப்பீட்டு நிறுவனத்தை 5488258 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
2. மத்ஸ்ய ஆஜீவிகா சுரக்ஷா: (Matsya Aajeevika Suraksha)
இரண்டாவது காப்பீட்டுத் திட்டத்திற்கு 'மத்ஸ்ய ஆஜீவிகா சுரக்ஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது புயல் போன்ற இயற்கை பேரழிவுகளின் தாக்கத்திலிருந்து மீனவப் பெண்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கை ஏற்பட்டால், வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் மீனவப் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையாக அதிகபட்சமாக ரூ.10,000 வரை வழங்கப்படும். இந்த காப்பீடானது சூறாவளி மற்றும் புயல் காரணமாக, மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாமல் வருமானம் இழப்பு நேரும் நாட்களை ஈடு செய்யும்.
3.சம்பூர்ண பசுதன் கவச்: (Sampoorna Pashudhan Kavach)
மூன்றாவது காப்பீட்டுத் திட்டமானது 'சம்பூர்ண பசுதன் கவாச்'. கால்நடை விலங்குகளின் (பால்) இறப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட மைக்ரோ காப்பீட்டுத் திட்டம் இதுவாகும்.
AIC-யின் தலைவர்-மேனேஜிங் டைரக்டர், கிரிஜா சுப்ரமணியன் தலைமையில், AIC நிறுவனம் கிராமப்புற மகளிர் சுயஉதவி குழுக்களை மைக்ரோ இன்சூரன்ஸ் ஏஜென்ட்களாக இணைத்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற புளுபெர்ரி- விவசாய பண்ணை அசத்தல்!
கொப்பரை மற்றும் பயறு கொள்முதலுக்கான தேதி மாவட்டம் வாரியாக அறிவிப்பு!
Share your comments