வள்ளிமதுரை கிராமத்திலுள்ள வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டின் இடது மற்றும் வலது கால்வாய்களின் மூலம் 5108 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் உள்ள வரட்டாறு நீர்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டின் இடது மற்றும் வலது கால்வாய்களின் மூலம் 5108 ஏக்கர் நிலங்கள் 40 நாட்கள் பாசன வசதி பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று (20.02.2023) தண்ணீர் திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் ஆணையின் படி, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று முதல் 31.03.2023 வரை பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 25 ஏரிகளுக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கன அடி தண்ணீரும், புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நேரடி பாசனத்திற்கு 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கன அடி தண்ணீரும், ஆக மொத்தம் 40 நாட்களுக்கு 5108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 103.68 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வரட்டாறு அணையின் இடது மற்றும் வலது புற கால்வாயிகளில் பாசனத்திற்க்காக 5108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் (20.02.2023) நேற்று முதல் 40 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 25 ஏரிகள் மூலம் பழைய ஆயக்கட்டு பகுதியான 2555 ஏக்கர் நிலமும் புதிய ஆயக்கட்டு பகுதியான 2853 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 5108 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது.
இதன் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, சாமநத்தம் புதூர், எல்லப்புடையாம்பட்டி, நாதியானூர், கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி மற்றும் செல்லம்பட்டி ஆகிய 15 கிராமங்கள் பயன்பெறுகின்றன. வரட்டாறு நீர்தேக்கத்தில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, பாசனம் செய்ய கேட்டு கொள்ளப்படுகிறது.
எனவே, விவசாய பெருங்குடி மக்கள் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, இந்நீரினை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் பிரபு, தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் க.விஜயா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் கே.மாலினி, கீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க :
ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம்!
சர்க்கரை ஏற்றுமதி அதிகரிக்கப்படுமா ? உணவுத்துறை செயலாளர் விளக்கம்
Share your comments