தாவரங்களின் வளர்ச்சியை தூண்டிட உதவும் ஒருவித இரசாயனங்களின் பெயர்தான் ஹார்மோன்கள் என்றும், PGR (PLANT GROWTH REGULATOR) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை தமிழில் வளர்ச்சி யூக்கிகள் என்றும் வளர்ச்சி சீராக்கிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பொதுவாக தாவர வளர்ச்சியில் 5 ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும் என குறிப்பிட்ட வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன், அவற்றின் தன்மைகள் குறித்து விரிவாக கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்.
5 ஹார்மோன்களின் விவரம் பின்வருமாறு-
- ஆக்சீன் (Auxin)
- சைட்டோகினின் (Cytokinin)
- ஜிபெரெலின்ஸ் (Gibberllins)
- எத்திலீன் (Ethylene)
- அப்சிசிலிக் அமிலம் (Abscisic Acid)
மேற்குறிப்பிட்ட இந்த 5 வகையான ஹார்மோன்கள் தாவர வளர்ச்சியில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதனை தற்போது காணலாம்.
ஆக்சீன்:
தாவரங்களின் வளர்ச்சியானது சூரிய ஒளியை நோக்கி வளர்தல் மற்றும் கீழ்நோக்கி வேர் வளர்ச்சி (STIMULATE ROOT FORMATION), தாவர வளர்ச்சியின் செல் உருவாக்கம், பூக்கள், பழங்கள் உருவாக்கம் போன்றவைகளுக்கு இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன.
சைட்டோகினீன்:
தாவரங்களின் பக்க வாட்டு மொட்டுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நீண்ட காலத்திற்கு பூக்கள் மற்றும் பழங்களின் ஊட்டசத்து திரட்டலை மேம்படுத்த உதவுகின்றன. இலை முதிர்ச்சியை தாமதப்படுத்தும். புதிய உறுப்புகளை உருவாக்கிடவும், பாதிப்படைந்த தாவரங்களின் பாகங்களை சரி செய்யவும் இந்த ஹார்மோன்கள் உதவிடும்.
ஜிபெரெலின்ஸ்:
தண்டு வளர்ச்சி, முளைப்பு தன்மை, செயலற்ற நிலை, பூ வளர்ச்சி மற்றும் இலை மற்றும் பழங்கள் முதிர்ச்சி அடைதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகின்றன.
எத்தீலின்:
எத்திலீன் ஒரு குறிப்பிடத்தக்க தாவர ஹார்மோன் ஆகும், இது நிறைவுறா ஹைட்ரோகார்பன் வாயுவாக செயல்படுகிறது. மற்ற செயல்பாடுகளுடன் இணைந்து வேர் வளர்ச்சியை உருவாக்கிடவும் காய்களை பழங்களாக பழுக்க வைக்கவும் உதவுகின்றன. முதிர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது.
அப்சிசிலிக் அமிலம் ( ABA):
தாவர வளர்ச்சி மற்றும் இதர அம்சங்களை ஒழுங்குபடுத்தும் ஒரு தாவர ஹார்மோன் ஆகும். விதை மற்றும் மொட்டு செயலற்ற நிலை, உறுப்பு அளவு கட்டுப்பாடு, இலை முதிர்ச்சி, விதை முளைப்பு, வளர்ச்சி தடை ஆகியவற்றை சரி செய்கிறது.
ஹார்மோன்களின் செயல்பாடுகள்:
மேற்கண்ட ஹார்மோன்கள் பெரும்பாலும் செடியின் அடிப்பகுதியை சுற்றி காணப்படும். இவைகள் பயிர் வளர்ச்சியை சரியான நேரத்தில் தூண்டி இறுதியில் விளைச்சலை அதிகரிக்க உதவுகின்றன. ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் செயற்கையான ஹார்மோன்களை வாங்கி பிபிஎம் அளவில் இலைவழி தெளிப்பாக தெளித்து பயன்பெறலாம்.
இயற்கையாக தாவரங்களின் வளர்ச்சியிலுள்ள ஏற்ற தாழ்வுகளை சரிசெய்ய இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லாவா? என அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
(மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம்/முரண் இருப்பின் வேளாண் ஆலோசகரை தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம். தொடர்பு எண்: 9443570289)
Read more:
TNAU: நெல் வயலில் உரமிடும்- களையெடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான தேசிய காப்புரிமை!
கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் முன்னுரிமை!
Share your comments