முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க இன்று முதல் புதிய மின்கட்டண நடைமுறை அமலுக்கு வருகிறது. அதன்படி குறிப்பிட்ட சில வகை குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் 8 ரூபாய் 15 பைசாவிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு-
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மற்றும் புகாரினை கேட்டு வருகிறார். அந்தவகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைப்பெறும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த முதல்வர் குடியிருப்புகளுக்கான மின் கட்டண முறையில் மாற்றம் கொண்டு வருவதாக கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தெரிவித்தார்.
மேலும் இதுக்குறித்து முதல்வர் அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: “சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் (small apartments) உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.
இதன்கீழ், பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்” எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின் படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தப்படுகிறது
இதன் மூலம் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50/யூனிட் என நிர்ணயித்தும் 01.11.2023 முதல் அமலுக்கு வருமாறு ஆணை எண்: 9. நாள் : 31.10.2023 மூலம் வெளியிட்டுள்ளது. மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமலாகும் நிலையில் பலர் இதனை வரவேற்றுள்ளனர்.
மேலும் காண்க:
மலிவு விலையில் விவசாய நிலம் வாங்க சிறந்த 5 இடங்கள் எது?
2000 ரூபாயை நெருங்கியது ஒரு சிலிண்டர் விலை- வியாபாரிகள் அதிர்ச்சி
Share your comments