சீரற்ற காலநிலையினால் இந்தியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து விவசாயிகளின் நஷ்டத்திற்கு வழிவகுத்துள்ளது. ஏறத்தாழ தற்போது வரை 5.23 லட்சம் ஹெக்டர் கோதுமை பயிர் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்பாராத விதமாக பெய்து வரும் மழையினால் விவசாயிகளுக்கு பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டதுடன் அறுவடை மேற்கொள்ள சிரமத்தையும் உண்டாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5.23 லட்சம் ஹெக்டேர் கோதுமை பயிர் சேதமடைந்துள்ளதாக தற்போது வரை மதிப்பிடப்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்கக்கோரி மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கியுள்ளனர். ஆளும் மாநில அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில், "எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். அதைப்போல் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை உடனடியாக பார்வையிட்டு சேத நிலவரத்தை மதிப்பிட வேண்டும்" என என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே வானிலை மாறுபாட்டால் ஏற்பட்ட பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு சமீபத்தில் 25% உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவில், காங்கிரஸ் தலைவர்கள் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக சாடினர், “இந்த நெருக்கடியிலிருந்து மீட்க ஒவ்வொரு விவசாயிக்கும் 24 மணி நேரத்திற்குள் அரசாங்கம் ₹65 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்”என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இரு மாநிலங்களிலும் கோதுமை பயிர் சேதத்தை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசின் சார்பில் கொள்முதல் தொடங்கியுள்ளது. கோதுமை மற்றும் பிற ராபி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவையும் மாநில அரசுகளுடன் இணைந்து அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் என்று ஒன்றிய விவசாய செயலாளர் மனோஜ் அஹுஜா PTI-யிடம் தெரிவித்தார்.
கோதுமை விளையும் முக்கிய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பருவமழை பெய்துள்ளது. இந்த மழையானது இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்கால பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு தொடர்பான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுக்கோளும் விடுத்துள்ளனர்.
மேலும் காண்க:
விவசாயிகளை அச்சுறுத்தும் பாம்பு பிரச்சினைக்கு தீர்வு- பள்ளி மாணவர்கள் சாதனை
Share your comments