கடலுார் மாவட்டத்தில் 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் (சோலார் பேனல்) மோட்டார் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் முன் வரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி கூறியதாவது:
-
பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானியத்தில் சோலார் பேனல் பம்புசெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
-
விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் பேனல் பம்புசெட்டுகள் 5 எச்.பி., முதல் 10 எச்.பி., வரையில், 70 சதவீத மானியத்தில் அமைத்து தரப்படுகிறது.
-
இதற்கான செலவில் 30 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் பங்களிப்பாக வழங்குகிறது.
-
கடலுார் மாவட்டத்தில் நடப்பு (2020-2021) ஆண்டில் 580 பம்புசெட்டுகள் அமைக்க இலக்கு நிர்ணயித்து, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 283 ஒதுக்கப்பட்டுள்ளது.
-
முதற்கட்டமாக ஆதி திராவிட விவசாயிகளுக்கு 8, இதர விவசாயிகளுக்கு 10 பம்பு செட் அமைக்க இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
-
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பித்து பதிய வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாடு மின்துறையில் இலவச இணைப்புக்கோரி ஏற்கனவே விண்ணப்பித்த விவசாயிகள் அவர்களுடைய பதிவு மூப்பை இழக்க வேண்டியதில்லை.
-
இதுவரை இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பிக்காதவர்கள் இத்திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகளை அமைக்க இலவச மின் இணைப்புக் கோரி பதிய வேண்டிய அவசியமில்லை.
-
மேலும், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை மின் கட்டமைப்புடன் வரும் காலங்களில் இணைக்க விரும்பும் விவசாயிகள் இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பிக்கலாம்.
-
இத்திட்டத்தில் விண்ணப்பிப்போர், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசனத்துடன் இணைக்க உறுதிமொழி அளிக்க வேண்டும்.
-
வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர்நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள்ளும், சிமெண்ட் கரை கட்டாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள்ளும் நிலத்தடி நீரை இறைக்க அனுமதி இல்லை.
-
அப்படி இறைக்க பொதுப் பணித் துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
அரசு மானியத்துடன் சோலார் பேனல் பம்புசெட் அமைக்க விரும்பும் கடலுார் வருவாய் கோட்ட விவசாயிகள் சின்னகங்கணாங்குப்பம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்திலும், (04142 292770), சிதம்பரம் வருவாய் கோட்ட விவசாயிகள் பூதகேணியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் (04144 232707), விருத்தாசலம் வருவாய் கோட்ட விவசாயிகள் சிதம்பரம் ரோடு பூதாமூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் (04143 238242) மற்றும் கடலுார் வேளாண் செயற்பொறியாளர் அலுவலகம் ( 04142 292358) ஆகிய அலுவலகங்களில் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
இயந்திரம் மூலம் நடவுக்கு ரூ.5 ஆயிரம் மானியம்- வேளாண்துறை அறிவிப்பு!
தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மானியம்!
Share your comments