தமிழக அரசுடன் இணைந்து, மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி (Energy Efficiency)' நிறுவனம், சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத, 'எலக்ட்ரிக்' எனப்படும், பேட்டரியில் இயங்கும் பஸ்களை இயக்க உள்ளது.
மின்சாரப் பேருந்து
தமிழக போக்குவரத்து துறை சார்பில், சென்னையில், தனியார் நிறுவனம் வாயிலாக வடிவமைக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பஸ், 2019 இறுதியில், சென்னை சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் சோதனை ரீதியாக இயக்கப்பட்டது. பின், அந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிதி நிறுவனம் வாயிலாக, 500 எலக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்யவும், தமிழக அரசு முடிவு செய்தது. அத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. டீசலில் இயங்கும் பஸ், லிட்டர் டீசலில், 5 கி.மீ., செல்லும். தற்போது, லிட்டர் டீசல் விலை, 94 ரூபாயாக உள்ளது. எலக்ட்ரிக் பஸ்சை (Electric Bus) ஒரு முறை சார்ஜ்செய்தால், 50 கி.மீ.,க்கு மேல் செல்லும். டீசல் பஸ்சை விட செலவு, 30 - 40 சதவீதம் குறைவு.
மக்கள் தொகை
இந்நிலையில், தற்போது மத்திய அரசு, 40 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள ஒன்பது நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்க, மத்திய அரசின் எனர்ஜி எபிஷியன்சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, மஹாராஷ்டிர மாநிலத்தில், மும்பை, புனே; டில்லி; கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு; தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்; தமிழகத்தில் சென்னை; குஜராத்தில் ஆமதாபாத், சூரத்; மேற்கு வங்கத்தில் கோல்கட்டா ஆகிய ஒன்பது நகரங்களில், எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு எலக்ட்ரிக் பஸ் விலை, 1 கோடி ரூபாய்க்கு மேலாகும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதுடன், விலையும் அதிகம் இருப்பதால், மாநில அரசுகள் சொந்தமாக எலக்ட்ரிக் பஸ்களை வாங்க தயக்கம் காட்டுகின்றன. மத்திய அரசின் அனுமதியை அடுத்து, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், எலக்ட்ரிக் பஸ்களை வாங்கும். ஒரே சமயத்தில் அதிக பஸ்களை வாங்குவதால், அந்நிறுவனத்திற்கு குறைந்த விலையில் பஸ்கள் கிடைக்கும்.
வருவாய் பங்கீடு
சென்னையில், எலக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தொடர்பாக, எனர்ஜி எபிஷியன்சி அதிகாரிகள், விரைவில் தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளனர். அரசு அனுமதிக்கும் வழித்தடத்தில், எனர்ஜி எபிஷியன்சி, எலக்ட்ரிக் பஸ்களை இயக்கும். டிக்கெட் கட்டணம், வருவாய் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக, அதிகாரிகளின் பேச்சின் போது முடிவு செய்யப்படும்.
மேலும் படிக்க
தமிழகத்திற்கு அடுத்த பாதிப்பு: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திரா திட்டம்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்! ரூ. 20,000 தள்ளுபடி!
Share your comments