புனே-மஹாராஷ்டிராவில், ஒரு கூடை 'அல்போன்சா' மாம்பழங்கள், 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொங்கன், ரத்னகிரி மாவட்டங்களில், மாம்பழங்களின் அரசனாக கருதப்படும் அல்போன்சா வகை மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அல்போன்சா மாம்பழம் (Alphonso Mangoes)
மாம்பழ சீசன் துவங்கும்போது, முதற்கட்டத்தில் விளைந்த மாம்பழங்களை ஏலம் விடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், மாம்பழங்கள் ஏலம் போகும் விலையின் அடிப்படையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு வியாபாரம் இருக்கும் என்பது வியாபாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி, புனே மாவட்டத்தில் உள்ள ஏ.பி.எம்.சி., எனப்படும் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் அமைப்புக்கு வந்த அல்போன்சா மாம்பழங்கள் நேற்று ஏலம் விடப்பட்டன. ஏலத்தின் துவக்கத்தில், ஒரு கூடை மாம்பழத்திற்கு 5,000 ரூபாய் என அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. பின், பலரும் போட்டி போட்டு ஏலத்தில் பங்கேற்றனர்.
அதிக விலை (High Price)
இறுதியாக, ஒரு கூடை மாம்பழம், 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 50 ஆண்டுகளில், இவ்வளவு அதிக விலைக்கு அல்போன்சா மாம்பழங்கள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை. இந்த மாம்பழ கூடைகளுக்கு, மலர்மாலை அணிவித்து, வியாபாரிகள் வணங்கும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் படிக்க
Share your comments