மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு செல்லும் நடமாடும் நூலகம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில் உங்களைத் தேடி நூலகம் என்ற பெயரில் நடமாடும் நூலகம் சேவை துவங்கப்பட்டுள்ளது. டெம்போ டிராவலர் வேனில் இந்த நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ் ஆங்கில மொழிகளில் 800 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இலக்கணம், இலக்கியம், வரலாறு, உரைநடை, கதை, ஆளுமைகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் இந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த நூலகம் தினமும் இரண்டு மாநகராட்சி பள்ளிகளுக்கு செல்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 வரை ஒரு பள்ளியிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஒரு பள்ளியிலும் இந்த நூலகம் நிற்கிறது.
அந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் இந்த நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுத்து படித்துவிட்டு மீண்டும் புத்தகங்களை நடமாடும் நூலகத்தில் வைத்துவிட வேண்டும்.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது இடங்களிலும் இந்த நூலகம் நிற்கிறது.
இந்த நேரத்தில் பொதுமக்கள் புத்தகங்களை எடுத்து வாசிக்கலாம்.
சோதனை அடிப்படையில் தற்போது ஒரு வாகனம் மட்டும் இயக்கப்பப்டு வருகிறது. இந்த நடமாடும் நூலகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments