அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக பொங்கல் பரிசு ஒரு சில குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த ஜன.2 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ரொக்கத் தொகை வழங்குவதில் நிபந்தனை:
அதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை ரேசன் கார்டுதாரர்கள், தவிர்த்து மற்ற ரேசன் அட்டைத்தாரர்களுக்கு ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் கடந்த (07.01.2024) முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. டோக்கன் வழங்கியதை அடுத்து வருகிற 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பினைத் தொடர்ந்து பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான முறையான வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்கும்:
இந்நிலையில், அனைத்து ரேசன் அட்டைத் தாரர்களுக்கும் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையினை பரிசீலித்த அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைத் தாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10.1.2024 முதல் 13.1.2024 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். 14.1.2024 அன்று விடுபட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிடவும், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பொங்கல் பரிசினை பெற்றிட குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக கடும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதைப்போல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் படி, மகளிருக்கான ரூ.1000- பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னரே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read also:
வீடி தேடிவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்- வாங்க மறந்துடாதீங்க?
Bus Strike: கோயம்பேடுக்கு விசிட் அடித்த அமைச்சர்- அரசின் முடிவு என்ன?
Share your comments