டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லிக்கு வரும் 207 ரயில்களை இந்திய ரயில்வேத்துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டினை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பலத்துறைகளின் கீழ் கருத்தரங்கு கூட்டம் நடைப்பெற்று வந்த நிலையில், ஜி-20 யின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் வடக்கு ரயில்வே ஜி-20 மாநாட்டிற்காக மொத்தம் 207 ரயில் சேவைகள் ரத்து செய்துள்ளதாகவும் , 36 ரயில் சேவைகள் செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் குறுகிய கால சேவையாக (வழித்தடம் மாற்றம்/ பயண தூரம் குறைப்பு) குறைத்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 15 ரயில்களின் டெர்மினல்களை புது தில்லிக்கு மாற்றியுள்ளதாகவும் மற்றும் 70 பயணிகள் ரயில்களுக்கு டெல்லிக்கு வெளியே வெவ்வேறு இடங்களில் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 பாஸேன்ஜர் ரயில்களின் வழித்தடங்களைத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உலகளாவிய ஜி-20 உச்சி மாநாட்டினை இந்தியா முதல் முறையாக தலைமையேற்று நடத்துகிறது, இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜான் பிடன் மற்றும் பல நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக, ”செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 15 வரை ஜி20 மாநாட்டினால் டெல்லி மக்களுக்கு நிறைய சிரமங்கள் இருக்கும், அதற்காக நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெல்லி வருகைத் தரும் மற்ற நாட்டின் தலைவர்கள் நமது விருந்தினர்கள். அவர்களின் பாதுகாப்புக்காக போக்குவரத்து விதிகள் மாற்றப்படும், நீங்கள் பல இடங்களுக்குச் செல்வதில் தடை ஏற்படலாம், ஆனால் இந்த பாதுகாப்பு விஷயங்கள் முக்கியம்” என்று பிரதமர் கூறினார்.
செப்டம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை புது தில்லி மாவட்டம், ராஜ்காட் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் ரிங் ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து விதிகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் சரியான அடையாளத்துடன் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், அத்தியாவசியமற்ற சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த போக்குவரத்து விதிமுறைகள் காரணமாக டெல்லி வாழ் மக்கள் மெட்ரோ சேவைகளை பயன்படுத்த அறிவுத்தப்பட்டுள்ளார்கள்” என்றார்.
மேலும் காண்க:
Share your comments