கர்நாடக மாநிலம் பச்சினட்கா தாலுகாவில் உள்ள ஒரு விவசாயி பறவை மற்றும் விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து பயிரினை பாதுகாக்க குழாய் துப்பாக்கி (Pipe gun) ஒன்றினை பயன்படுத்தி வருகிறார். இது அப்பகுதி விவசாயிகளின் கவனத்தினை ஈர்த்துள்ள நிலையில் இதனை உருவாக்கிய விவசாயிக்கு பலரும் தங்களது பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு எதிர்ப்பாராத காலநிலை மாற்றத்தினால் போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். சந்தைகளிலும் காய்கறிகளுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்தன. இதனால் பொதுமக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவின் தென்பகுதியில் நடப்பாண்டு போதிய மழை இல்லாததால் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்தனர். அதையும் சமாளித்து விவசாயிகள் பயிரிட்ட, பயிர் நல்ல உயரத்துக்கு வளர்ந்த நிலையில் பறவைகள், குரங்குகள் போன்றவை தாக்கும் சம்பவமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடக மாநிலம் பச்சினட்கா தாலுகாவில் உள்ள விவசாயி ஒருவர், பறவைகளை பயமுறுத்த வளைந்த பைப் போன்ற அமைப்பிலான ஒன்றில் பட்டாசுகளைப் பயன்படுத்தி பறவைகளை, விலங்குகளை விரட்ட புதிய யோசனையை முன் வைத்துள்ளார்.
இந்த புதுமையான ஐடியாவை கண்டுபிடித்தவர் பச்சினட்காவை சேர்ந்த நெல்சன் டிசோசா என்கிற விவசாயி. அறுவடை நிலைக்கு வந்த பயிர்களை குரங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்றுவது நெல்சனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சவாலாக இருந்தது.
இந்நிலையில் தான் நெல்சன் அரை அங்குல விட்டம் கொண்ட இரும்புக் குழாயின் ஒரு முனையில் ஒரு சிறிய பட்டாசை வைத்து கொளுத்துகிறார். இது ஒரு பெரிய ஒலியை எழுப்புகிறது. குழாயின் மற்றொரு திறந்த முனை வழியாக பீறிட்டு எழும் ஒலியானது பயிரினைத் தாக்க வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை பயமுறுத்துகிறது.
இந்த எளிய கருவிக்கான செலவு எவ்வளவு என்று கேட்டால் இன்னும் அதிர்ச்சிக்கு போவீர்கள். அவர் பயன்படுத்தும் இரும்பு குழாயின் விலை ரூ.50 மற்றும் மறுமுனையில் வைக்கப்படும் பட்டாசு விலை ஒரு ரூபாய் மட்டுமே. இப்போது இந்த எளிய கருவியும், அதன் செயல்முறையும் நெல்சன் குடும்பத்திற்கு ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது.
நெல்சன் தனது வயல்களில் உலாவும் போது எல்லாம் சிறிய வளைந்த குழாயை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். இந்த ஆண்டு மழை குறைவாக இருந்தாலும் அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.
அவரது கண்டுபிடிப்பு அவரது நிலத்தில் உள்ள பயிரை காப்பாற்றியது மட்டுமின்றி, அவரது தாலுகாவினை சார்ந்த விவசாயிகளுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் பயிர்களைப் பாதுகாக்கும் முறை குறித்து அறிவூட்டியுள்ளது என்றால் மிகையல்ல.
மேலும் காண்க:
கரும்பு விவசாயிகளுக்கு 3 லட்சம் கடன்- ஆட்சியர் அறிவிப்பு
சும்மா சொல்லக்கூடாது- Hybrid பேபி கார்ன் சாகுபடியில் சாதித்த விவசாயி
Share your comments