தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைக்கும் பணி, நாளை துவங்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, ஆதார் எண்களை சேகரிக்க உள்ளனர். வாக்காளர் பட்டியலில், ஒரே நபரின் பெயர், பல இடங்களில் உள்ளது. வெளியூரில் வசிப்போர், தாங்கள் வசிக்கும் இடத்திலும், சொந்த ஊரிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கின்றனர். இது, கள்ள ஓட்டு போட வழிவகுக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வாக்காளர் பட்டியலுடன், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை துவக்கியபோது, சிலர் நீதிமன்றம் சென்று தடை பெற்றனர்.
தற்போது நீதிமன்றம் தடையை நீக்கி உள்ளது. அதைத் தொடர்ந்து, ஆக., 1 முதல், 2023 மார்ச் 31க்குள், வாக்காளர்களின் ஆதார் எண்களைப் பெற்று, வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு (Aadhar -Voter Id Linking)
தமிழகம் முழுதும் நாளை முதல், வாக்காளர்களின் ஆதார் எண்களை இணைக்கும் பணி துவங்குகிறது.
இது குறித்து, அரசியல் கட்சியினருக்கு விளக்க, நாளை மாநில அளவிலும், அனைத்து மாவட்ட அளவிலும், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடக்க உள்ளது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: வாக்காளர்களின் ஆதார் எண்களைப் பெறுவதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நாளை முதல் வீடு வீடாக செல்வர். வாக்காளர்களிடம் 'படிவம் 6பி' வழங்குவர். அதில், வாக்காளர் தன் ஆதார் எண்ணை எழுதிக் கொடுக்க வேண்டும்.
ஆதார் எண் இல்லாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் உட்பட, தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள, 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் எண்ணை எழுதி வழங்க வேண்டும்.
சிறப்பு முகாம்கள் (Special Camp)
வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் கொடுப்பதன் வழியே, தேர்தல் கமிஷன் வெளியிடும் தேர்தல் தொடர்பான செய்திகளை பெற முடியும். வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை தவிர்க்க முடியும். ஓட்டுச்சாவடி அலுவலரிடம், ஆதார் எண் வழங்க முடியாதவர்கள், www.nvsp.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். இது தவிர, 'Voter Help Line' மொபைல் செயலி வழியாகவும், ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. அப்போது வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து, சுதந்திர தின விழாவை ஒட்டி நடக்கும் கிராம சபைக் கூட்டங்களில், பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதுவரை ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது.
இனி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது. மேலும், 17 வயது நிரம்பியவர்களும் பெயரை பதிவு செய்யலாம். ஆனால், 18 வயது வந்த பின்னரே, பட்டியலில் சேர்க்கப்படும்.
மேலும் படிக்க
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: ஆகஸ்ட் 1 இல் முக்கிய ஆலோசனை!
Share your comments