பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ரூ.200-லிருந்து ரூ.300 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY), மே 1, 2016 அன்று, உ.பி.யின் பல்லியாவில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. கிராமப்புற வீடுகளுக்கு எல்பிஜி போன்ற சமையல் எரிபொருளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் (BPL) குடும்பங்கள், SC/ST சமூகங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), அந்த்யோதய் அன்ன யோஜனா (AAY), வனவாசிகள் மற்றும் பிற பின்தங்கிய குழுக்களின் பயனாளிகளுக்கு LPG இணைப்புகளை வழங்குவதில் இந்தத்திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். இந்த சந்திப்பின் போது, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு வழங்கப்பட்டும் மானியத் தொகையை ₹200-ல் இருந்து ₹300 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தான் அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ₹200 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துணை மானியம் காரணமாக 2023-24 நிதியாண்டில் 7,680 கோடி கூடுதல் நிதி செலவு ஏற்படக்கூடும் என்று ஆகஸ்ட் முடிவுக்குப் பிறகு தாக்கூர் கூறியுள்ளார்.
உஜ்வாலா பயனாளிகள் தற்போது 14.2 கிலோ சிலிண்டருக்கு சந்தை விலையான ₹903-ல் மானியம் போக ₹703 செலுத்துகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் புதிய முடிவிற்குப் பிறகு, இப்போது சிலிண்டர் ஒன்றுக்கு ₹603 செலுத்தினால் போதும். மாநிலம் வாரியாக விலை நிலவரம் பின்வருமாறு-
டெல்லி:
- வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 kg)- ரூ.903
- உஜ்வாலா பயனாளிகள் (14.2 kg) - ரூ.603
- வணிக சிலிண்டர் (19 kg) - ரூ.1731.5
கொல்கத்தா:
- வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 kg)- ரூ.929
- உஜ்வாலா பயனாளிகள் (14.2 kg) - ரூ.629
- வணிக சிலிண்டர் (19 kg) - ரூ.1839
மும்பை:
- வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 kg)- ரூ.902.5
- உஜ்வாலா பயனாளிகள் (14.2 kg) - ரூ.602.5
- வணிக சிலிண்டர் (19 kg) - ரூ.1684
சென்னை:
- வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 kg)- ரூ.918
- உஜ்வாலா பயனாளிகள் (14.2 kg) - ரூ.618
- வணிக சிலிண்டர் (19 kg) - ரூ.1898
சில தினங்களுக்கு முன்னர் தான் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை ரூ.209 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வானது (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றமில்லை எனவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
தாறுமாறாக உயர்த்தப்பட்ட சிலிண்டரின் விலை- இன்று முதல் புதிய விலை அமல்!
Share your comments