
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி சில வாரங்களாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொறியியல், மருத்துவம், ஆர்ட்ஸ் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணைய ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோல் மாணவர்களிடையே அதிகமாக விரும்பப்படும் துறைகளில் ஒன்று வேளாண்மை.
கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மை துறைகளில் இணைவதற்கு மிகப்பெரிய போட்டி உள்ளது. அதற்கு காரணம் உணவுத்துறைகளில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகளும், அதன் சமூக தாக்கமும்தான். வேளாண்மை பட்டப்படிப்பை பொறுத்தவரை 4 ஆண்டு பி.எஸ்சி வேளாண்மை தான் முதல்நிலை படிப்பாகும். தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மொத்தமாக 6 ஆயிரம் இடங்கள் இருக்கிறது.
வேளாண் படிப்புகள்
அதேபோல் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 18 அரசுக் கல்லூரிகளிலும், 28 தனியார் கல்லூரிகளிலும் படிக்க முடியும். அரசுக் கல்லூரிகளில் பி.டெக் இன்ஜினியரிங், ஃபுட் புராசசிங், வனம் உள்ளிட்ட 14 படிப்புகளை படிக்க முடியும். ஆனால் தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும் பி.எஸ்சி அக்ரி மற்றும் தோட்டக்கலை ஆகிய துறைகள் மட்டுமே இருக்கின்றன.
அரசுக் கல்லூரிகள்
இதனால் வேளாண்மையை பொறுத்தவரை பெரும்பாலும் அரசுக் கல்லூரிகளில் படிப்பதே சிறந்தது. வேளாண்மை துறையில் இணைய விரும்புபவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் இடங்கள் என்பதால், கட் ஆஃப் மார்க்கில் உச்சத்தில் இருந்தால் மட்டுமே அரசுக் கல்லூரிகள் இடம் கிடைக்கும்.
வேளாண் பல்கலைக்கழக விதி
இல்லையென்றால் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் இடம் பெற்று கொள்ளலாம். ஆனால் அதற்கு பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. மேனேஜ்மெண்ட் கோட்டாவில் இணைவோரும் வேளாண் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளது.
அரசுத்துறை பணிகள்
சமகாலத்தில் வேளாண் சார்ந்த உணவு பொருள் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்திருப்பதால், வேளாண்மை படிக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் அரசுத் துறைகளில் மட்டும் வேளாண்மை அலுவலர், வேளாண்மை ஆராய்ச்சி விஞ்ஞானி, கிராம வேளாண்மை உதவியாளர் பணிகளுக்கு செல்ல முடியும்.
தனியார் துறைகள்
அதேபோல் மண் பரிசோதனை நிபுணர், வேளாண்மை விரிவாக்க அலுவலர் ஆகிய பணிகளில் இணைய முடியும். இதுமட்டுமல்லாமல் விதை மற்றும் உர நிறுவனங்கள், வேளாண்மை உபகரண நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல் தொழில், வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்று ஏராளமான பணிகள் கொட்டி கிடக்கின்றன. இதுதவிர்த்து வங்கிகளிலும் இன்சூரன்ஸ் பிரிவில் வேளாண் அலுவலராகவும் பணியாற்றலாம்.
சுயதொழில் வாய்ப்புகள் அதேபோல் வேளாண் படிக்கும் மாணவர்களால் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றிபெற முடியும். அதுமட்டுமல்லாமல் வேளாண் படிப்புக்கு பின் சுயதொழில் செய்யும் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதற்கான உரிய அனுபவத்துடன் சுயதொழில் தொடங்கினால், மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது.
Read more
Share your comments