பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தில் உதவி பெற தகுதியற்ற 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட, 3,000 கோடி ரூபாயை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, லோக்சபாவில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Thomar) தெரிவித்தார்.
விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டம்
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் 6,000 கோடி ரூபாய் வழங்கும் பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டத்தை 2019 பிப்ரவரியில் மத்திய அரசு துவக்கியது. இதுவரை எட்டு தவணைகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1 லட்சத்து 37 ஆயிரத்து, 192 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒன்பதாவது தவணை நிதி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே நிதியுதவி பெற முடியும். உயர் வருவாய் பெறும் விவசாயிகள், கோவில் நிலம் வைத்திருப்போர் இந்த நிதி உதவியை பெற முடியாது.
விவசாய குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்,எல்.ஏ.,க்கள், மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோரும் இதில் பயன்பெற முடியாது. தகுதியுள்ள விவசாயிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தேர்வு செய்து, மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
போலிகள் பயன்
அவர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசு நேரடியாக பணம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதிஉதவி திட்டம் பற்றி லோக்சபாவில் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் பலன் அடையும் நோக்கில் தான், பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. எனினும் இந்த திட்டத்தில் குளறுபடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெற தகுதியற்ற 42.16 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2,992 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதை திரும்ப வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
அசாமில் 8.35 லட்சம், தமிழகத்தில் 7.22 லட்சம், பஞ்சாபில் 5.62 லட்சம், மஹாராஷ்டிராவில், 4.45 லட்சம், உத்தர பிரதேசத்தில், 2.65 லட்சம், குஜராத்தில் 2.25 லட்சம் பேர் என, தகுதியற்ற விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
அசாமிலிருந்து 554 கோடி ரூபாயும், பஞ்சாபில் இருந்து 437 கோடி ரூபாயும், மஹாராஷ்டிராவில் இருந்து 358 கோடி ரூபாயும், தமிழகத்தில் இருந்து 340 கோடி ரூபாயும், உத்திர பிரதேசத்தில் இருந்து 258 கோடி ரூபாயும், குஜராத்தில் இருந்து 220 கோடி ரூபாயும் மீண்டும் திரும்ப பெற வேண்டியுள்ளது.
கடும் நடவடிக்கைகள்
ஆதார், பொது நிதி மேலாண்மை, வருவான வரி கணக்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போது, இந்த முறைகேடு நடந்துள்ளது தெரிந்தது.
தகுதியற்ற விவசாயிகள் பலன் அடைவதை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதியுதவி பெற தகுதியுள்ள விவசாயிகளை தேர்வு செய்வதில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு உதவும் இந்த திட்டத்தில் முறைகேடுகளை அனுமதிக்க முடியாது.
மேலும் படிக்க
வாழை நாரிலிருந்து கூடை பின்னி, தினசரி வருமானம் ஈட்டும் பெண்கள்!
விவசாய சோலார் மின் இணைப்புக்கு ரூ.3 லட்சம் மானியம்
Share your comments