சேலம், நெய்காரப்பட்டியில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண் விளைப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் இன்று (02.11.2023) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பேசுகையில், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கு அதிக லாபம் பெறுவதற்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இம்மாவட்டங்களில் விவசாயிகளால் உற்பத்தி செய்யக்கூடிய விளைப்பொருட்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இக்கருத்தரங்கில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதியாளர்களின் வேளாண் விளைப்பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இக்கருத்தரங்கில் வேளாண் வணிக வாய்ப்புகள், ஏற்றுமதி நடைமுறைகள், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் சந்தை வாய்ப்புகளும், ஏற்றுமதி இடர்பாடு மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் துறை வல்லுநர்கள் தொழில்நுட்ப உரையினை வழங்கவுள்ளார்கள். இதனை முறையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக உள்ளுர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை வேளாண் விளைப்பொருட்களை விற்பனை செய்திட அமைந்துள்ள வாய்ப்புகள் குறித்து விவசாய பெருமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை ஏற்றுமதி செய்து அதிக இலாபம் பெறலாம் என்பதால் துறை வல்லுநர்களை அழைத்து விவசாயிகளுக்கு தங்களது பொருட்களை எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்பது குறித்து இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.
பூசணித் தோலினை வீட்டுத் தோட்டத்துக்கு இப்படியும் பயன்படுத்தலாமா?
சேலம்,நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு மஞ்சள், முட்டை, மரவள்ளி, மாம்பழம், கோழி இறைச்சி, அரிசி, உணவு எண்ணெய்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, மஞ்சள் மலேசியா, அமெரிக்கா, பங்களாதேஷ், ஜெர்மன், ஜப்பன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், முட்டை பொருத்தவரை குவைத், பக்ரைன், ஈரான், ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோன்று மரவள்ளி கிழங்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அரேபியா, நெதர்லாந்த் மற்றும் பிரேசில் நாடுகளுக்கும், மாம்பழம்- ஜெர்மன், நெதர்லாந்த், ஐரோப்பிய, அரேபிய நாடுகளுக்கும், மக்காசோளம்-ஸ்ரீலங்கா, நேபாளம், மலேசியா, பங்களாதேஷ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள முதலில் தங்களின் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கான நிறுவனத்தை எளிதாக தொடங்கிடவும், அதனை தொடர்ந்து வங்கிக் கணக்கு, பான் (PAN) கார்டு பெறுதல், இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டு எண் பெறுதல், சந்தை தேர்வு, மாதிரிகள் அனுப்புதல், விலை நிர்ணயம் என விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மேற்கண்ட பணிகளை எளிதாக்கி கொடுக்கின்றனர் என MLA இரா.இராஜேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் அட்மாக்குழு தலைவர் வெண்ணிலாசேகர், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம். சேலம் வேளாண் விற்பனைக்குழு துணை இயக்குநர் முனைவர்.பா.கண்ணன், நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் முனைவர்.அ.நாசர், ஈரோடு வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் மகாதேவன் உள்ளிட்ட நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் முனைவர்.அ.நாசர் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதையும் காண்க:
விவசாயிகளே- MFOI விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு !
தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை- 4 நாட்களுக்கு பலத்த கனமழை எச்சரிக்கை
Share your comments