2023-24 நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துகளை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கேற்ப, திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் 22.01.2023 அன்று திண்டுக்கல்லிலும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் 24.01.2023 அன்று திருநெல்வேலியிலும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 10 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டறியும் வகையில், கருத்துக்கேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன. இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 810க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளிடமிருந்து வரப்பெற்றுள்ளன. மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை விரைவில் பெறுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. எனவே, இதுவரை அரசுக்கு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கீழ்க்காணும் வழிகளில் தெரிவிக்கலாம்.
- உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.
- கடிதம் மூலம் தெரிவிப்பதற்கான முகவரி:
வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர்,
வேளாண்மை (ம) உழவர் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை – 600 009. - மின்னஞ்சல் முகவரி [email protected]
- வாட்ஸ்ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண் 9363440360
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றே 2023-24ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள கருத்துக் கேட்பு ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டு, வேளாண்மையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்குமாறு வேளாண் உற்பத்தி ஆணையர், அரசுச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க
ஆகாயத்தாமரை செடிகளில் இருந்து இயற்கை உரம்: வனத்துறை அறிவிப்பு!
காட்டு பன்றிகளை விரட்ட புதிய டெக்னிக்! அசத்தும் புதுச்சேரி விவசாயிகள்!
Share your comments