கள்ளக்குறிச்சி மற்றும் கரூரில் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் வேளாண் பண்ணை இயந்திரங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. மேலும், கரூர் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் 475 வேளாண் பண்ணைக் கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வேளாண் விதை சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.
வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி
கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ், வேளாண்துறை மற்றும் தோட் டக்கலைத் துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க ரூ.5 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்படவுள்ளது. அதன் பொருட்டு இயந்திர விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் இடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் இயந்திர கண்காட்சி தொடங்கப்பட்டது.
உழவர் உற்பத்தியாளர் ஒங்கிணைப்பு கூட்டம்
இதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் சார்பில், வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடந்தது. இதனிடையே, உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திர விற்பனையாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் பேசுகையில், உழவர் உற்பத்தியாளர் குழு, வேளாண் இடுபொருட்களை கூட்டாக கொள்முதல் செய்வதால், விலை குறைவதோடு, போக்குவரத்து செலவினமும் குறைகிறது. தினசரி பண்ணை வரவு செலவு, கணக்கு பதிவேடு பராமரித்தல், கூட்டாக விளை பொருட்களை விற்பனை செய்வதால், குறைந்த சாகுபடி செலவில் நிறைந்த லாபம் ஈட்டப்படுகிறது.
வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்
கரூர் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக இதுவரை, 13 ஆயிரத்து, 400 சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, 670 உழவர் ஆர்வலர் குழுக்களும், 134 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை வாயிலாக, 98 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, 475 வேளாண்கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. உழவர் ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு, ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு இதுவரை, 60.45 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என டி.ஆர்.ஓ ராஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க..
வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!
Share your comments