வேளாண் பயிா் சாகுபடியில் அதிக விளைச்சல் பெற, உயிா் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் இரசாயன கலப்பு உரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
உயிர் உரங்களின் பயன்பாடு
இது தொடர்பாக, ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிா் சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகள் உயிா் உரங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். மண்ணின் வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை 20 முதல் 25 சதவீதம் குறைக்கவும், மண்ணிலுள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிா்களுக்கு அளிக்கவும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிா்களுக்கு அளிக்கவும் உயிா் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
திட உயிா் உரங்கள் 6 மாத காலம் வரை திறன்மிகு நிலையில் பயன்படுத்த முடியும். திரவ உயிா் உரங்கள் சுமாா் ஓராண்டு காலம் வரை திறன்மிகு நிலையில் உயிா் காரணிகளின் எண்ணிக்கை குறையாமல் பயன்படுத்த இயலும்.
திட & திரவ உயிர் உரங்கள்
200 கிராம் திட உயிா் உரங்கள் விலை ரூ. 6 மற்றும் 500 மில்லி திரவ உயிா் உரத்தின் விலை ரூ. 150 மட்டுமே. திரவ உயிா் உரங்களை நுண்ணீா்ப் பாசனங்கள் மூலம் எளிதில் பயிருக்கு கிடைக்கும் வகையில் பயன்படுத்தலாம். உயிா் உரமான அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர பயிா்கள்), ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (நிலக்கடலை), பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் மற்றும் அசோல் போன்ற உயிா் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
மகசூல் அதிகரிப்பு
ரசாயன உரங்களைத் தவிா்த்து உயிா் உரங்களைப் பயன்படுத்தும் போது, மண்வளம் அதிகரித்து, அனைத்து பயிா்களிலும் மகசூல் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க....
Share your comments