முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு-மாடு திட்டம் தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை (Tamil Nadu Legislature)
சட்டசபையில் கால்நடை பராமரிப்பு, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தாக்கல் செய்தார்.
கறவை பசுக்கள் திட்டம் (Dairy Cows Project)
அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2-ம் வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில் கிராமப்புற பெண்களை ஊக்குவிக்கவும் மாநிலத்தில் கலப்பின பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்படி, ஒரு கிராம ஊராட்சியில் 50 பெண் பயனாளிகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக உருவாக்கி அவர்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு 12 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பசுக்கள் வாயிலாக 2.32 லட்சம் கன்றுகள் பிறந்துள்ளன. இதன் மூலம் கிராமப்புற ஏழை பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
வெள்ளாடுகள் திட்டம் (Goats Project)
இதே போல் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 50 ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு 6 லட்சம் வெள்ளாடுகள்- செம்மறியாடுகள் வழங்கப்பட்டு இதுவரை 86.99 லட்சம் குட்டிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
விலையில்லா நாட்டுக் கோழிகள் (Inexpensive country chickens)
விலையில்லா நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 60 லட்சம் கோழிகள் 2.4 லட்சம் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கால்நடை மற்றும் கோழியினங்களை பாதுகாத்து, உயர்ரக கால்நடை மற்றும் கோழியினங்களை கால்நடை வளர்ப்போருக்கு வழங்க 2021-23-ம் ஆண்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments