An e-bike that can travel 510 km
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மற்றும் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் காற்று மாசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளை சமாளிக்க மத்திய, மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனம் விரும்புவோரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். குறிப்பாக வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒருமுறை சார்ஜ் செய்தாலே 510 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொலராடோவைச் சேர்ந்த ஆப்ட்பைக் (OptBike) எனும் நிறுவனம் ஆர்22 எவரெஸ்ட் (R22 Everest) என்ற ஒருமுறை சார்ஜ் செய்தாலே அதிக தூரம் ஓடக்கூடிய இ-சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மலைகளில் பயணிக்க உதவும் மவுண்ட் பைக் வகையைச் சேர்ந்தது என்பதால் இந்த பைக்கிற்கு எவரெஸ்ட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
R22 எவரெஸ்ட் இ-சைக்கிள் 3.26 Wh லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் எடை மட்டுமே சுமார் 16 கிலோவாகும். இந்த பேட்டரிகள் பல விலையுயர்ந்த எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளை விட அதிக திறனும், அதிக பவரை சேமித்து வைக்க கூடியது. எனவே தான் இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 510 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
அது மட்டுமல்ல, R22 எவரெஸ்ட் இ-பைக் அதிகபட்சமாக 58 kmph வேகத்தில் 190 Nm டார்க் திறனை வெளியேற்றக்கூடிய மின் மேட்டாரைக் கொண்டுள்ளது. இந்த சூப்பர் பைக்கின் எடை சுமார் 72 கிலோ உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்த பிறகு, இந்த இ-சைக்கிளில் 24 கிமீ வேகத்தில், 510 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என ஆப்ட்பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது கரடு முரடான மலைப்பாதைகளில் பயணிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், கார்பன்-ஃபைபர், பிரேம், ஸ்விங்கார்ம், சஸ்பென்ஷன் செட்-அப், டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
R22 எவரெஸ்டில் எல்சிடி திரை பொருத்தப்பட்டுள்ளது, அதன் மூலமாக பேட்டரி அளவு, வேகம், இரண்டு மீட்டமைக்கக்கூடிய ட்ரிப் ஓடோமீட்டர்கள் மற்றும் வாழ்நாள் ஓடோமீட்டர் போன்ற தகவல்களைக் காணமுடியும். தற்போது கொலராடோவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள இந்த சைக்கிளின் விலை $18,900 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் ஆகும்.
மேலும் இந்த இ-பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கரடு முரடான மலைப்பாதைகளில் சவாரி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட R22 எவரெஸ்ட் இ-பைக்கை உலகின் மிகவும் உயரமான பல மலைப்பகுதிகளில் சோதனை செய்துள்ளதாக ஆப்ட்பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
வாகன, வீட்டுக் கடன்கள் உயரும் அபாயம்! எச்சரிக்கை விடும் ரிசர்வ் வங்கி
Share your comments