ஹைதராபாத்: ஆந்திராவில் நேற்று மாலை ஹவுரா-சென்னை வழித்தடத்தில் கேபிள் பிரச்சினை காரணமாக நின்றுக்கொண்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் மோதிய விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து மனித தவறு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையேயான சிறப்பு பயணிகள் ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கான சிக்னலை விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் கவனிக்கத் தவறியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் விசாகப்பட்டினம்-பலாசா ரயிலின் கடைசி மூன்று பெட்டிகளும், விசாகப்பட்டினம்-ராயகடா ரயிலின் இன்ஜினும், இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டதாக டிஆர்எம் சவுரப் பிரசாத் தெரிவித்துள்ளார். ஒரு பெட்டி தடம் புரண்டு மறுபுறம் இருந்த சரக்கு ரயில் வேகன் மீது சாய்ந்துள்ளது.
நேற்றிரவு 9 என்ற எண்ணிக்கையில் இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது என்று விஜயநகரம் ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்துள்ளார். இன்று காலைக்குள் மீட்புப் பணிகள் முடிவடையும் என்று நம்பிக்கைத் தெரிவித்த அவர், விபத்தில் படுகாயமடைந்த 40 பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தின் காரணமாக இதுவரை 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 22 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என்று பிஆர்ஓ பிஸ்வஜித் சாஹு இன்று காலை தெரிவித்தார். விசாகப்பட்டினம் - ராயகடா லோகோ பைலட்டின் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர் விபத்தில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்பு பணிகள் முழுமையாக நிறைவுப்பெற்றப் பின் இதுத்தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் ரயில்வேத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திரா முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ₹2.5 லட்சமும், சிறிய காயம் அடைந்த பயணிகளுக்கு ₹50,000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
ரயில்வே அமைச்சர், ஆந்திரா முதல்வரிடம் விபத்து குறித்து பேசியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைப்பெற்று வருகிறது. கிழக்கு கடற்கரை ரயில்வே விபத்து தொடர்பான உதவி எண்களை வெளியிட்டுள்ளது (புவனேஸ்வர் - 0674-2301625, 2301525, 2303069, மற்றும் வால்டேர் - 0891-2885914.)
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஒடிசாவில் மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட பயங்கரமான விபத்தில் 280 பயணிகள் வரை உயிரிழந்தனர். அதன் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ரயில் விபத்துகள் நடைப்பெற்று வருவது பொது மக்களிடையே கவலையை உண்டாக்கியுள்ளது.
இதையும் காண்க:
Kalamassery blast: கொச்சியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்பு
November Bank holiday: தீபாவளி உட்பட இவ்வளவு நாள் வங்கி விடுமுறையா?
Share your comments