90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இந்த ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம் என ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) என சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் 2023-ல் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற உள்ளதால் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது கருதப்படுகிறது. எனவே இதில் வெற்றிப்பெற அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 24x7 மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
ராய்பூரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லியின் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், "சத்தீஸ்கரில் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து மாநில அரசை (காங்கிரஸ்) கடுமையாக சாடியும் பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால். "சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன என்று ஒரு அறிக்கையைப் படித்துக் கொண்டிருந்தேன். 10 வகுப்புகள் இருந்த பல பள்ளிகள் தற்போது மூடப்பட்டு விட்டன” என்றார்.
"டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பாருங்கள் அல்லது டெல்லியில் தங்கியிருக்கும் உங்கள் உறவினர்களைக் கேளுங்கள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வித் துறையில் பெரும் மாற்றத்தை அரசு கொண்டு வந்துள்ளது. "நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, நாங்கள் பொதுவானவர்கள். உங்களைப் போன்றவர்கள், "என்றும் அவர் மக்கள் மத்தியில் உரையாடினார். இந்நிகழ்வில் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடனிருந்தார்.
சத்தீஸ்கர் போன்று மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் நிர்வாகக் குழுக்கள் என நான்கு குழுக்களை வெள்ளிக்கிழமை அமைத்துள்ளது. 300 யூனிட் இலவச மின்சாரம் என்கிற வாக்குறுதி அப்பகுதி மக்களிடையே பேசுப்பொருளாகி உள்ளது.
மேலும் காண்க:
Share your comments