இந்தியாவில் பல்வேறு தொழில்கள், முன்னேற்றப் பாதையில் இலாபகரமாக நடை போடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross domestic product) வேளாண்மையின் பங்கு, மிக முக்கியப் பங்காற்றி வருவது மறுக்க முடியாத உண்மை. தற்போதைய காலக்கட்டத்தில், கொரோனா வைரஸ் (Corona Virus) பரவி வரும் நிலையில் எண்ணற்ற தொழில்கள் நலிவடைந்து, நட்டத்தை (Loss) சந்தித்து உள்ளது. இருப்பினும், ஊரடங்கில் (Lockdown) பல்வேறு தளர்வுகளால், பல தொழில்கள் பாதி வேலையாட்களுடன் உற்பத்தியின் அளவை ஓரளவுக்கு குறைய விடாமல் பார்த்துக் கொண்டனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில், ஓர் நல்ல விசயம் என்னவென்றால், இந்த வருடத்தில் நல்ல பருவமழை பெய்துள்ளதால் அது, விவசாயத்திற்கு பேருதவியாக அமைந்துள்ளது. இந்தப் பருவ மழையினால் அணைகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளது.
வேளாண்மையில் அதிக உற்பத்தி
நடப்பாண்டில் நல்ல பருவமழையினால், நீர்நிலைகள், அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் எல்லாம் நிரம்பி வழிவதால், வேளாண்மைக்குத் தேவையான தண்ணீர் வேண்டிய அளவு கிடைத்துள்ளது. இதனால், பயிர்களுக்குத் தேவையான தண்ணீர், சரியான நேரத்தில் கிடைத்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்ல விளைச்சல் மூலம், மகசூலும் (Yield) அதிகரித்து விவசாயத் துறையில் உற்பத்தி அதிகரிக்கும் எனவும், நடப்பாண்டில் வேளாண்மையின் இந்த வளர்ச்சிக்கு காரணம், பருவமழை தேவையான அளவு பொழிந்தது தான் என்றும் கடன் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது (Credit Analysis and Research Group).
அதிக மழைப் பொழிவு
பருவ மழையின் வரவால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், (GDP) வேளாண்மையின் பங்கு 3.5 முதல் 4 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் இக்குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பருவத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு, 31 சதவிகிதம் அதிக மழை பெய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. 88 சதவிகித நிலப்பரப்பில் சராசரி மழை அளவை விட அதிக மழையும், 12 சதவிகித நிலப்பரப்பில் சராசரி மழை அளவை விட குறைந்த மழையும் பெய்துள்ளது என இக்குழுமம் தெரிவித்துள்ளது. மழையின் அளவு அதிகமானதால், விவசாயத்தின் உற்பத்தியும் அதிகரிக்கும். வருடந்தோறும் இதே மாதிரி நல்ல பருவமழை பெய்தால், விவசாயத்தில் அதிக உற்பத்தி நிச்சயம். விவசாயத்தின் உற்பத்தி தான், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கும் உந்து சக்தியாகும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்.
மேலும் படிக்க..
உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழுமம் தகவல்!
விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமே மழை அதிக அளவு பெய்து வெள்ளமாக மாறுவது தான்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
விடைபெறத் துவங்கியது தென்மேற்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
Share your comments