உணவு, பானம், எண்ணெய், நார், மரம், அழகு சாதனப்பொருட்கள் ஆகியவற்றின் ஆதாரமாக இருப்பதால், மனித குலத்திற்கு தென்னை ஒரு இயற்கைப் பரிசாக விளங்குகிறது.
இதனால் மக்களால் கல்பவிருட்சம் அல்லது ஜீவ விருட்சம் என்றும் அழைக்கப்படுகின்றது தென்னை. உலகளவில், இந்தியா தென்னை சாகுபடி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தேவை அதிகரித்துள்ளது (More Demand)
இளநீர் தேவை, தேங்காய் எண்ணெயின் பயன்பாடு மற்றும் தென்னை மர கைவினை பொருட்களின் தேவை, நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக தென்னை (Cocount)உற்பத்தியை அதிக அளவில் செய்வது மிக அவசியமாகிறது.
அதாவது கடந்த பத்தாண்டுகளில் தேங்காய்க்கான தேவை 500 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இது விநியோகத்திற்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளியை (Gap) அதிகப்படுத்தியுள்ளது.
தென்னங்கன்றுகள்
தேங்காய் மற்றும் அதனை சார்ந்தப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதால்,
தேவையைப் பூர்த்தி செய்ய, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்கு உயர்ரக தென்னந்தோப்புகளை அமைத்து, தற்போதுள்ள வயதான தென்னந்தோப்புகளுக்கு புத்துயிர் கொடுக்க தரமான தென்னங்கன்றுகள் தேவைப்படுகின்றன.
தற்போதைய தென்னை நாற்று பெருக்கவிகிதம் 1:1 என்பது 30சதவீதத் தேவையை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. தரம் மற்றும் மரபணு சீரான தன்மையில் சமரசம்செய்யாமல், பெருக்கல் விகிதத்தை குறைந்தபட்சம் 1:20 ஆக அதிகரிக்கவேண்டியுள்ளது.
திசு வளர்ப்பு (Tissue Culture)
இதனைக் கருத்தில் கொண்டு, தரமான தென்னங்கன்றுகள் வழங்கலின் தேவையை பூர்த்தி செய்யவும், விதை உற்பத்திக்காக காய்களின் எண்ணிக்கையை குறைக்கவும், திசு வளர்ப்பு (Tissue Culture) மூலம் உயரடுக்கு தென்னை மரபு வகைகளை பெருமளவில் பெருக்கவும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த மைல்கல்லை நோக்கிய முதல் படியாக, பல்கலைக்கழக தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்ப மையம் சார்பில், முதிர்ந்த தேங்காயில் உள்ள கரு முளையினைப் பிரித்தெடுத்து ஆய்வகத்தில் திசு வளர்ப்பு மூலம் செடியாக உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
உலக தென்னை தினத்தையொட்டி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தனது திசு வளர்ப்புத் தென்னைங்கன்றைக் களத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், இந்திய எண்ணெய்ப்பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் முனைவர் பி. இரத்தினம், பங்கேற்று, முதல் திசு வளர்ப்புத் தென்னங்கன்றை நட்டார்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற 1:2, 1:4 மற்றும் 1:8 என்ற பெருக்க விகிதத்தில், தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்ய வேளாண்மைப் பல்கலைக்கழகம் முயற்சி எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் கூறினார்.
இவ்விழாவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் இல. புகழேந்தி, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் எஸ்.மோகன்குமார் மற்றும் பிறத் துறை இயக்குனர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க...
NDAP : தரிசை விவசாய நிலமாக மாற்றினால் ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம்!
Share your comments