வெங்காய ஏற்றுமதிக்கான தடை மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருந்த நிலையில் தடை உத்தரவு மீண்டும் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உள்நாட்டு சந்தையில் காய்கறிகளின் இருப்பை உறுதி செய்யவும், விலையினை கட்டுக்குள் வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் வட்டாரங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காய்கறிகளில் முதன்மையான வெங்காயத்தின் சில்லறை விலையானது கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கிலோவுக்கு ரூ.30-ல் இருந்து கிலோவிற்கு ரூ.60 என்கிற வகையில் விலை இருமடங்காக உயர்ந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு 2023 டிசம்பரில், வெங்காய ஏற்றுமதியை ஒன்றிய அரசாங்கம் தடை செய்தது.
தடை உத்தரவு நீட்டிக்க காரணம் என்ன?
இந்நிலையில் இந்த தடை உத்தரவு மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ரபி பருவ பயிர்கள் அறுவடை முடிந்து சந்தைக்கு வந்தாலும், விலை இன்னும் குறையவில்லை என்கிற சூழலே நிலவுகிறது.
நுகர்வோர் விவகாரத் துறையின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை வெங்காயத்தின் சராசரி மொத்த விலை குவிண்டாலுக்கு ரூ.2500 என்கிற அளவில் இருந்தது. இதே காலத்தில் கடந்தாண்டு குவிண்டாலுக்கு ரூ.1500 என இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சில்லறை விற்பனையில் சராசரியாக தற்போது கிலோ ரூ.30 என்கிற அளவில் உள்ளது. இதே காலத்தில் கடந்தாண்டு ரூ.20 என்கிற விலைக்கு வெங்காயம் விற்பனையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரபி பருவத்தில் வெங்காய உற்பத்தியானது 60% பங்கைக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ரபி பருவ அறுவடை முடிந்தாலும் அதன் உற்பத்தி குறைவாக இருப்பதால், முக்கிய காய்கறிகளின் ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் விரும்பவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விவசாய சங்கங்கள் கோரிக்கை:
சில்லறை பணவீக்கம் பிப்ரவரியில் 22.1% ஆகவும், அதே நேரத்தில் ஜனவரி 2024-ல் 29.69% ஆக ஆகவும் இருந்தது. இருப்பினும், சந்தையில் வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2022-23 உடன் ஒப்பிடும்போது நடப்பு பயிர் ஆண்டில் வெங்காய உற்பத்தி 16% குறைந்து 25.47 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று சமீபத்தில் வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. பிரதான வெங்காய சாகுபடியின் மிகப்பெரிய உற்பத்தியாளரான மகாராஷ்டிராவில் நடப்பு பருவத்தில் உற்பத்தியானது 3.43 மெட்ரிக் டன் குறைந்துள்ளது.
பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், வெங்காயத்திற்கு இந்தியாவினை தான் நம்பியுள்ளன. தடை விதிக்கப்பட்டதிலிருந்து இந்த நாடுகளில் விலைகள் அதிகரிக்கத் தொடங்கின. சமீபத்தில், வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு முறையே 50,000 டன் மற்றும் 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Read more:
அதிகரிக்கும் ஆண்களின் மலட்டுத்தன்மை- விவசாய பூச்சிக்கொல்லிக்கும் பங்கு இருக்கா?
Share your comments