தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், அருகே கனமழையால் 500 ஏக்கர் வாழை தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மிதக்கும் வாழை மரங்கள் (Floating banana trees)
சாயர்புரம் அருகே உள்ள பெரும்படை சாஸ்தாவின் கோவில் பகுதியில் விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் வாழை விவசாயம் செய்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், வாழைவெட்டி ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. இந்த ஓடையில் ஏற்பட்ட உடைப்பால், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 500 ஏக்கர் வாழையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்ற வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனால் வாழைகள் அழுகி சேதமடையும் நிலை உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெரும்படை சாஸ்தாவின் கோவிலிலிருந்து ஆறுமுகமங்கலம் செல்லும் கல்பாலத்தை மூழ்கடித்து மழைநீர் அதிகளவில் செல்வதால் இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை (Request)
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,‘ இப்பகுதியில் உள்ள ஆறுமுகமங்களம் குளத்தை தூர்வாராததால் தண்ணீரை தேங்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் அருகிலுள்ள வாலைவெட்டி ஓடையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் காட்டாற்று வெள்ளத்தில் வரும் மழை தண்ணீரும் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு வாழை நிலங்களுக்குள் புகுந்துள்ளது.
இந்த வகையில் 500 ஏக்கர் வாழை தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் சில நாட்களுக்கு தண்ணீர் தேங்கினால் வாழைகள் அழுகி விளைச்சல் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது. முறையாக வாழை வெட்டி ஓடையை சீரமைத்தால் பழையகாயல் வழியாக கடலுக்குச் மழைநீர் சென்றுவிடும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
மேலும் படிக்க
தக்காளியைத் தொடர்ந்து கத்தரிக்காய் விலை உயர்வு!
மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments